குற்றப்பத்திரிகை தயார் - எதிர்கொள்ள தயார்! இலங்கை மின்சாரசபை - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இடையே வலுக்கும் மோதல்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்குவதற்கான குற்றப்பத்திரிகை தயாரிக்க்பட்டிருப்பாக கூறியுள்ள மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நாடாளுமன்றில் ஆழுங்கட்சியின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராகத் தேவையான சட்ட நடவடிக்கைகளும், அவரை நீக்குவதற்கான குற்றப்பத்திரிகையும் தற்போது தயாரிக்கப்பட்டுவிட்டன.
இதற்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதிநிதிகள் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஜனக ரத்நாயக்க என்ற நபரே இந்த மின்சாரத் தடைக்குக் காரணமானவர்.
வேறு யாரும் இல்லை. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏனைய அதிகாரிகளை தவறாக வழிநடத்தி அவர்களின் அனுமதியின்றி வேலைகளை செய்து இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளனர்.
எனவே, இதற்கு எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பாராளுமன்றத்தில் தேவையான ஏற்பாடுகள் உள்ளன. எனினும் குற்றப்பத்திரிகையை எதிர்கொள்ள தயார், என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.