யாழ்.போதனா வைத்தியசாலையில் இம் மாதத்தில் மட்டும் 300 டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை! 33 வீதமானோர் சிறுவர்கள்..
யாழ்.போதனா வைத்தியசாலையில் 2023ம் ஆண்டு தை மாதத்தில் மட்டும் 300 டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக தொிவித்திருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் சி.யமுனானந்தா,
அதில் 33 வீதமானவர்கள் சிறுவர்கள் எனவும், கடந்த வருடத்தின் தை மாதத்தில் 200 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். எனினும் இம்மாதம் 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த பிரதி பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கைமிகவும் அதிகரித்து காணப்படுகின்றது. அதேபோல யாழ்.போதனா வைத்தியசாலையிலும் 2023 ஆம் ஆண்டு தை மாதம் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 300 ஆக காணப்படுகின்றது.
இதில் 33சத வீதமானவர்கள் சிறுவர்களாக காணப்படுகின்றார்கள் 2022 ஆம் ஆண்டு தை மாதம் 200 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் கடந்த வருட தை மாதத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் 50% அதிகமாக காணப்படுகின்றது.
எனவே டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை செய்யாவிட்டால் இந்த வருடம் சுமார் 2000 டெங்கு நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்ககூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
எனவே டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் முக்கியமாகும் குறிப்பாக டெங்கு நோய் அதிகம் பாதிப்பது சிறுவர்களையே எனவே சிறுவர்களுடைய பெற்றோர்கள் இதில் கவனம் எடுக்க வேண்டும்.
டெங்கு நோயானது சிறுவர்களை குறிப்பாக 15 வயதுக்குட்பட்டவர்களை மிகவும் கடுமையாக பாதிக்கின்றது. அடுத்ததாக வயது முதிர்ந்தவர்களை பாதிக்கின்றது.
அடுத்ததாக உடற்பருமன் உடையவர்கள் சலரோக நோயுடையவர்கள் அஸ்மா நோயுடையவர்களை பாதிக்கின்றது எனவே டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு மிக முக்கியமாகும்.
கடந்த வருடம் சுமார் ஐந்து பேர் டெங்கு நோயினால் யாழ்ப்பாணத்தில் இறந்துள்ளார்கள். இவ்வருடம் இவ்வாறான இறப்புகள் ஏற்படாது இருப்பதற்கு டெங்கு பெருகும் இடங்களை அகற்றுதல் வேண்டும்.
டெங்கு விழிப்புணர்வு வாரம் பொதுச் சுகாதார பரிசோதரர்கள் மூலம் செய்கின்றோம். டெங்கு நோயிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள சுற்றுச்சூழலை சுத்தமாக பேணவேண்டும் என்றார்.