SuperTopAds

அரசின் அசாதாரண வரிச் சுமையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் - Editor III
அரசின் அசாதாரண வரிச் சுமையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளத்திற்கான வரி விதிப்பு சம்மந்தமாக தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று(26) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாக நடாத்தியது.

"அநீதியான அரசின் தன்னிச்சையான மக்களுக்கு பாதகமான வரிக்கொள்கையை கண்டிப்போம்" எனும் தொனிப்பொருளில்  பல்வேறுபட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இக் கண்ட ஆரப்பட்டத்தினை மேற்கொண்டனர்.

அதிகரித்த வரிகளை வசூலிப்பதன் மூலம் பொதுத்துறையில் பணியாற்றும் தொழில்வாண்மைமிக்கோருக்கான ஊதியத்தினை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் , அவ்வாறு வரிகள் விதிக்கப்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகத்தான் என்ற போலியான பிரச்சாரத்தினையும் முன்னெடுத்து வருகின்றது . 

ஆனால் எமது வரிகள் மூலம் திரட்டப்படும் பணம் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் நோக்கத்திற்காக ஒருபோதும் பயன்படுத்தப்படபோவதில்லை . இந்த வரி அதிகரிப்பு நியாயமற்றது என்பது மட்டுமல்ல . இதனால் எமது தேசம் அதன் சாத்தியமான முழு வளத்தினையும் இழக்கும் அபாயம் உள்ளது .என்ன விலையினைக் கொடுத்தாவது இம்மோசமான பேரிடர் நிலையினை முற்றுமுழுதாக தடுக்கவேண்டும் . எமது நாட்டில் இன்று நிலவுகின்ற பொறுப்பற்ற , அநீதியான நிலை குடிமக்களை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளியுள்ளதனையும் இங்கு நாம் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது என்ற விடயத்தை மையப்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பட்டத்தினை மேற்கொண்டனர்.

திணிக்காதே திணிக்காதே வரியினை திணிக்காதே!,வெளியேற்றாதே வெளியேற்றாதே மூளைசாலிகளை வெளியேற்றாதே!,அடிக்காதே அடிக்காதே மக்களின் வயிற்றில் அடிக்காதே! எனும் பல சுலோகங்களை முன்வைத்து  ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டனத்தை மேற்கொண்டனர்.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், இலங்கை மின்சார சபை ஊழியர்கள், சங்கம் வைத்தியர்களின் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.