எதிரணியில் மெஸ்ஸி, நெய்மர், எம்பாப்பே!! -தனி ஒருவராக மாஸ் காட்டிய ரொனால்டோ-

ஆசிரியர் - Editor II
எதிரணியில் மெஸ்ஸி, நெய்மர், எம்பாப்பே!! -தனி ஒருவராக மாஸ் காட்டிய ரொனால்டோ-

சவுதி அரேபியாவில் மெஸ்ஸி, நெய்மர், எம்பாப்பே ஆகிய முன்னணி வீரர்களைக் கொண்ட அணிக்கு எதிராக நடந்த கால்பந்து போட்டியில் ரியாத் லெவன் அணிக்காக களமிறங்கிய ரொனால்டோ தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சவுதி அரேபியாவில் உள்ள கிங் பஹத் சர்வதேச மைதானத்தில் வைத்து  ரியாத் லெவன் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் ஆகிய அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றது.

இதில் அல் நஸர் அணிக்கு அண்மையில் ஒப்பந்தம் ஆன கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் லெவன் அணி சார்பாக களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

அதே சமயம் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி சார்பாக கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, நெய்மர், மற்றும் எம்பாப்பே போன்ற முன்னணி கால்பந்து வீரர்கள் களமிறங்குவார்கள் என அறிவிக்கப்பட்டது.

மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகிய இரண்டு கால்பந்து ஜாம்பவான்கள் இதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டு பார்சிலோனா மற்றும் மான்செஸ்டர் அணிகள் மோதிய போட்டியில் எதிர்கொண்டனர்.

நட்பு ரீதியான இந்த போட்டியில் ரியாத் லெவன் அணியை 4-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி வெற்றி பெற்று இருந்தாலும், மெஸ்ஸி, நெய்மர், மற்றும் எம்பாப்பே ஆகிய முக்கிய 3 வீரர்களுக்கு எதிராக ஒற்றை ஆளாக களமிறங்கிய ரொனால்டோ இந்த போட்டி முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தினார்.

பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிக்கு எதிராக நடந்த இந்த போட்டியில் ரொனால்டோ 2 அசத்தலான கோல் அடித்துள்ளார், அத்துடன் ஆட்டத்தில் 85 சதவிகித துல்லியமான பாஸ், 40 தொடுதல், 6 ஷாட்கள், 1 கோல் வாய்ப்பு உருவாக்கியது போன்ற தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரொனால்டோவின் இந்த சிறப்பான ஆட்டத்தின் காரணமாக அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் ரொனால்டோ 34 ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், 45+5 ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலும் அடித்து அசத்தி இருந்தார், அதே போல் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிக்காக மெஸ்ஸி 3 நிமிடத்தில் ஒரு கோலும், 60 ஆவது நிமிடத்தில் எம்பாப்பே ஒரு கோலும் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு