விராட் கோலி, சும்பன் கில் அபாரம்!! -இலங்கைக்கு 391 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா-

ஆசிரியர் - Editor II
விராட் கோலி, சும்பன் கில் அபாரம்!! -இலங்கைக்கு 391 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா-

இலங்கைக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ஓட்டங்களை குவித்துள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

அடுத்ததாக இரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சும்பன் கில் களமிறங்கினர். இதில் இலங்கை வீரர் கருணாரத்னே வீசிய 16 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் ரோகித் சர்மா (42 ஓட்டங்கள், 2 பவுண்டரி, 3 சிக்ஸர்) பிடி கொடுத்து வெளியேறினார். 

அதனைத் தொடர்ந்து விராட் கோலியுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இவர்களது இணைப்பாட்டத்தில் இந்திய அணியின் ஓட்ட விகிதம் வேகமாக உயர்ந்தது. 

97 பந்துகளில் 14 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை விளாசி 116 ஓட்டங்கள் குவித்த சுப்மன் கில், இலங்கை வீரர் ரஜிதாவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். 

இதையடுத்து விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்தார். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 38 ஓட்டங்களில் (2 பவுண்டரி, 1 சிக்ஸர்) பிடியெடுப்பு மூலம் வெளியேறிய நிலையில், அடுத்து வந்த கே.எல்.ராகுல் (7 ஓட்டங்கள்), சூர்யகுமார் யாதவ் (4 ஓட்டங்கள்) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்று அதிரடி காட்டிய விராட் கோலி, 100 ஓட்டங்களை கடந்து இலங்கை வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 

110 பந்துகளில் 13 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு 166 ஓட்டங்கள் குவித்த விராட் கோலி, இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இறுதியாக 50 பந்துப் பரிமாற்றங்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ஓட்டங்களை குவித்தது. இதையடுத்து 391 என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு