SuperTopAds

என்ன கூட்டணி உருவானாலும் நாங்கள் ஒன்றாகவே பயணிப்போம்! கூறுவது தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா..

ஆசிரியர் - Editor I
என்ன கூட்டணி உருவானாலும் நாங்கள் ஒன்றாகவே பயணிப்போம்! கூறுவது தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா..

தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பில் புதிய கூட்டணிகள் உருவானாலும் தமிழ்தேசியம் சார்ந்த கட்சிகளுடன் ஒன்றாகவே பயணிப்போம் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 

நேற்றைய தினம் சனிக்கிழமை யாழில் ஐந்து கட்சிகள் இணைந்து ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி என்ற கட்சியை அறிவித்தமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ்தேசியப் பரப்பில் பயணிக்கின்ற தேசியம் சார்ந்த கட்சிகள் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பில் இணைந்து பணியாற்றுகின்றன. கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி உள்ளூராட்சி தேர்தலில் தனித்துப் போட்ட தீர்மானித்தது.

இது யாவரும் அறிந்தது. குறித்த தீர்மானத்தை எடுத்ததால் நாங்கள் சக கட்சிகளுடனோ அல்லது அவர்கள் எங்களுடனோ இணைந்து பணியாற்றாமல் விடுவதென்று அர்த்தம் அல்ல.

நாங்கள் கொழும்பில் கூட்டமைப்பு பங்காளிகளுடன் குறித்த முடிவை எடுத்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஒன்றாகவே சென்று சந்தித்தோம். 

அதுமட்டும் அல்லாது தமிழ் மக்களுடைய நீண்டகால அரசியல் பிரச்சனையை தீர்ப்பதற்கு எமது சகா தமிழ் கட்சிகளுடன் நாங்கள் அனைவரும் ஒன்றாகவே பயணித்திருக்கிறோம்.

ஆகவே தற்போதைய நிலைப்பாட்டில் தமிழரசு கட்சி தனியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் அதன் பெறுபவர்கள் அடுத்த கட்டத்திற்கு எம்மை இட்டுச் செல்லும்.

ஆகவே கூட்டணிகள் புதிதாக இணைக்கப்பட்டாலும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடையங்களில் நாம் தொடர்ந்தும் ஒன்றாகவே பயணிப்போம் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்ததுடன் 

அனைவருக்கும் தனது தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.