30 வருடங்களுக்கும் மேலாக வழிபாடு நடத்த முடியாமலுள்ள ஆலயங்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! பொங்கல் விழாவுக்கு வருகைதரும் ஐனாதிபதியிடம் கோரிக்கை...
30 வருடங்களாக மக்கள் வழிபாடு நடத்த முடியாமல் உள்ள ஆலயங்களை விடுவிப்பதற்கும், வழிபாடு நடத்துவதற்கும் ஐனாதிபதி ஆவண செய்யவேண்டும். என செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சைவத் தமிழர்களின் முக்கிய வழிபாட்டு நாளாகிய பொங்கல் திருநாளை மதித்து யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சைவ மக்களின் வழிபாட்டுத் தலங்கள் வழிபட முடியாமல் பாதுகாப்பு வலயம் என்ற பேரில் மக்கள் வழிபாடு செய்யும் உரிமை மறுக்கப்பட்டமையை கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்நாட்டில் உண்மையான தர்மத்தைப் பேண் வேண்டுமானால் எமது தொன்மை வாய்ந்த ஆலயங்களில் பூசை வழிபாடுகள் நடைபெறவேண்டும், கீரிமலை ஆதிச் சிவன் ஆலயம். கீரிமலை கிருஷ்ணன் கோவில்,
கீரிமலை சடையம்மா மடம், காங்கேசன்துறை சிவபூமி சுக்கிரவார திருவோணச் சத்திரம், வயாவிளான் மாம்பிராய் பிள்ளையார் கோவில். பலாலி இராஜஇராஜேஸ்வரி அம்மன் கோவில் போன்ற முக்கிய தலங்களும் வேறு சில ஆலயங்களும் விளக்கின்றி உள்ளது.
வடக்கில் பொங்கல் வழிபாட்டிற்கு வரும் தாங்கள் இவ்வாலயங்களை மக்களிடம் கையளித்து உதவ வேண்டும், காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டலை நடத்தும் படையினர் பாரம்பரியமான சத்திரத்தை இடித்துவிட்டு தமது ஹோட்டல் வளவோடு சேர்த்து வைத்துள்ளனர். இவை சைவ மக்களின் மனதில் மிகுந்த வேதனையைத் தருகிறது.
எனவே இவற்றை உடனடியாக உரியவர்களிடம் கையளிப்பதற்கு தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என சைவமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இவ்விடயம் தொடர்பாக கடந்த முப்பது ஆண்டுகளாக நாம் பதவியில் இருந்த பலரிடமும் முறையிட்டு எவ்வித பயனும் இல்லை.
இந்த தருணத்திலாவது இப்பிரச்சினையைத் தீர்த்துவைக்குமாறு சைவமக்கள் சார்பில் நன்றியுடன் வேண்டுகிறோம் என்றுள்ளது.