கட்டுப்பாடற்ற வேகம்! வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளான கொள்கலன் பாரவூர்தி, ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்..
கட்டுப்பாடற்ற வேகத்தில் பயணித்த கொள்கலன் பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து சகோத வர்த்தக நிலைய வளாகத்திற்குள் நுழைந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று மாலை 4.20 மணியளவில் கட்டுவை ச.தொ.ச விற்பனை நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.
நீர்கொழும்பு திசையில் இருந்து சிலாபம் திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ச.தொ.ச விற்பனை நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள மூடப்பட்டிருந்த கடை ஒன்றை மோதியுள்ளதுடன்
ச.தொ.ச. விற்பனை நிலையத்துக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் நின்ற நபர் ஒருவரின் மீதும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் மீதும் மோதியுள்ளது.
பின்னர் அருகில் இருந்த மதிலில் முட்டிமோதி சரிந்த நிலையில் நின்றுள்ளது. கனரக வாகனத்தின் கீழ் முச்சக்கர வண்டி சிக்கிக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக சதொச விற்பனை நிலையத்துக்கு அருகில் உள்ள ஒழுங்கை ஒழுங்கையில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த கடையின் முன்பக்கத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் பலியானவர் நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நஸ்வாத் மரிக்கார் (வயது 55) என்பவராவார்.
முச்சக்கர வண்டியில் இருந்த நபர் காயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நீர்க்கொழும்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.