தனித்து நின்று போராடிய சனகாவின் முயற்சி வீண்!! -இலங்கை அணியை 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா-
இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 373 ஓட்டங்களை குவித்தது. அபாரமாக ஆடிய விராட் கோலி, 113 ஓட்டங்களை குவித்தார். ரோகித் சர்மா 83 ஓட்டங்களையும், ஷூப்மான் கில் 70 ஓட்டங்களையும் விளாசினர்.
இதையடுத்து 374 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிசங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை கொடுத்தனர்.
ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. அவிஸ்கா பெர்னாண்டோ 5 ஓட்டங்களுடனும், குஷால் மெண்டிஸ் ஓட்டம் எடுக்காமலும், அசலங்கா 23 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக ஆடிய தனஞ்செயா டி சில்வா 9 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்களை சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் வலுவான நிலையில் இருந்த பதும் நிசங்கா, 72 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
ஹசரங்கா டி சில்வா (16) துனித் வெல்லாலகே (0), கருணாரத்னே (14) என பின்கள வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
நெருக்கடிக்கு மத்தியில் அசராமல் நின்று ஆடிய அணித்தலைவர் தசுன் சனகா சதம் அடித்தார். எனினும், 50 பந்துப் பரிமாற்றங்களின் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 306 ஓட்டங்களையே சேர்த்தது. எனவே இந்தியா 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதிவரை போராடிய அணித்தலைவர் தசுன் சனகா 108 ஓட்டங்களுடனும், ரஜிதா 9 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிராஜ் 2 விக்கெட் எடுத்தார். இந்த வெற்றியின்மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.