SuperTopAds

தேர்தல் ஆணைக்குழு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு! சகல பணிகளும் ஆரம்பம், நிதியை அரசு வழங்கும்...

ஆசிரியர் - Editor I
தேர்தல் ஆணைக்குழு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு! சகல பணிகளும் ஆரம்பம், நிதியை அரசு வழங்கும்...

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் உரிய முறையில் நடந்து கொண்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியிருக்கின்றார். 

உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வேட்பு மனுக்களை ஏற்று 5 முதல் 7 வாரங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும்.

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு காகிதத் தட்டுப்பாடு பிரச்சினையாக அமையுமா?

தேர்தல் பணிக்கான அனைத்து அச்சிடும் பணிகளையும் அரசு அச்சகத் துறையுடன்தான் செய்கிறோம். அதன்படி அரச அச்சக அதிபர், மற்ற ஊழியர்களோ இதுபோன்ற பிரச்னை இருப்பதாக கூறவில்லை. 

தேவையான அனைத்து நடவடிக்கைகளும் சரியான முறையில் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டே இந்தத் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும், எனவே கடந்த ஆண்டிலிருந்தே இதற்குத் தயாராகிவிட்டோம்.

நிதி நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது?

தேர்தல் ஆணைக்குழு என்ற முறையில் அரசியலமைப்பில் வழங்கிய பணியை நிறைவேற்றுவதே எங்கள் பணி. தேவையான நிதி வசதிகளை வழங்குவது, தற்போதுள்ள அரசாங்கத்தின் பொறுப்பாக அரசியலமைப்புச் சட்டத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, திறைசேரியும் அது தொடர்பான நிறுவனங்களும் அதற்குத் தேவையான பணிகளைச் செய்யும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

இதேவேளை 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அழைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளது.

அதன்படி வேட்புமனுக்களை ஏற்கும் காலம் எதிர்வரும் 21ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது. 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் உட்பட 340 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு 9,347 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். எவ்வாறாயினும், எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக் காலம் 5 வருடங்கள் நிறைவடையாத காரணத்தினால், அதன் வேட்புமனுக்கள் கோரப்படவில்லை.

தேர்தலுடன் தொடர்புடைய பிணை தொகையினை ஏற்கும் நடவடிக்கை நேற்று தொடங்கி 20ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.

இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினால் பரிந்துரைக்கப்படும் ஒரு வேட்பாளருக்கு 1,500 ரூபாவும், சுயேச்சைக் குழுவின் வேட்பாளருக்கு 5,000 ரூபாவும் பிணைத் தொகையாக செலுத்தப்பட வேண்டும்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி தினம் ஜனவரி 23ஆம் திகதி என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஜனவரி 23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தங்களின் நிறுவன தலைவர்கள் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.