யாழ்.வல்வெட்டித்துறையில் தஞ்சமடைந்த தமிழக மீனவர்களின் படகிலிருந்த மீனை விற்பனை செய்த இருவர் பிணையில் விடுதலை..
யாழ்.வல்வெட்டித்துறையில் தஞ்சமடைந்த இந்திய மீனவர்களின் படகிலிருந்த மீன்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் உள்ளிட்ட இருவரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது,
கடந்த டிசம்பர் 29ம் திகதி இயந்திரக் கோளாறு காரணமாக, வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி பகுதியில் ஒரு நாட்டுப் படகில் நான்கு மீனவர்கள் கரையொதுங்கினர். குறித்த மீனவர் படகில் மீன்கள் இருந்துள்ளது.
குறித்த மீன்களை எடுத்து விற்பனை செய்ததாக இருவர் மீது வல்வெட்டித்துறை பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தினர்.
முதலாவது சந்தேகநபர் டிசம்பர் 30ம்திகதி வல்வெட்டித்துறை பொலிசாரினால் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு ஒரு இலட்சம் ரூபா ஒரு ஆட் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
முதலாவது சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில் குறித்த மீன்களை எடுத்து விற்பனை செய்யுமாறு சமாசத் தலைவரே கூறினார் என தெரிவித்தார்.
இதனடிப்படையில் நேற்றுமுன்தினம் (02) இரண்டாவது சந்தேக நபரான வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவரை கைது செய்து நேற்று (3) வல்வெட்டித்துறை பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் சந்தேகநபரை 5000ரூபா காசுப் பிணையிலும், தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பிணையிலும் செல்ல உத்தரவிட்டார்.
மேலதிக அறிக்கையிடலுக்காக 2023 மே மாதம் 29ம் திகதி வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.