எனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் யாழ்.மாவட்ட மக்களுக்கு வழங்கிய திருப்தியுடன் விடைபெறுகிறேன்..!

ஆசிரியர் - Editor I
எனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் யாழ்.மாவட்ட மக்களுக்கு வழங்கிய திருப்தியுடன் விடைபெறுகிறேன்..!

எனது சக்திக்கு உட்பட்ட மக்கள் சேவையை யாழ்.மாவட்டத்திற்கு வழங்கியுள்ளேன். என்ற திருப்தியுணர்வுடன் பணி உயர்வு பெற்றுச் செல்கிறேன். என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பிரிபுபசார நிகழ்வில் கலந்து கொண்டு ஏற்புரை ஆற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக 2020 ஆம் ஆண்டு மாசி மாதம் 17ஆம் திகதி எனது கடமைகளை பொறுப்பேற்றேன்.

அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு பதவி உயர்வு இடமாற்றம், ஓய்வும் அரச என்பன சாதாரண ஒரு விடயம் நான் வரும்போது தனியாகவே வந்தேன் எனது அனைத்து செயல்பாடுகளுக்கும் மாவட்டமே உறுதுணையாக இருந்தது.

மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தில் எனது சக்திக்கு உட்பட்டு என்னால் மேற்கொள்ள வேண்டிய அனைத்து மக்கள் பணிகளையும் திருப்தியுடன் நிறைவேற்றி இருக்கிறேன். சுமார் 3500 மில்லியனுக்கு மேல் பெறுமதியான மக்கள் நலத்திட்டங்கள், 140 மேற்பட்ட காணி அல்லாத மக்களுக்கு காணி வழங்கி வீட்டுத்திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்.

மீள்குடியேற்றத்தைப் பொறுத்தவரையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்களை தமது சொந்த இடங்களில் குடியேற்றி இருக்கிறோம். அது மட்டுமல்ல இவ்வருடம் உற்பத்தித்திறன் மற்றும் சமூக மேம்பாட்டு நிதியம் ஆகியவற்றில் தேசிய மட்டத்தில் இரு விருதுகளை யாழ்.மாவட்டம் பெற்றது. 

இவ் வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் இந்த இடத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். நான் மாவட்ட செயலகத்தில் அரச அதிபராக பணியாற்றிய காலத்தில் கொரோனா உட்பட பல்வேறு சவால்களை சந்தித்திருக்கிறேன். 

அத்தனை சவால்களையும் எதிர்கொள்வதற்கு மாவட்டத்தில் இருந்த பிரதேச செயலாளர்கள் மேலதிக அரசாங்க அதிபர்கள், திணைக்களத் தலைவர்கள், ஊடகங்கள் என அத்தனை தரப்பினரது உதவிகளும் எனக்குக் கிடைத்தது.

சில சந்தர்ப்பங்களில் வீடு செல்லும்போது என்னுடைய மனைவி மாவட்ட செயலகத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இடம்பெற்றதா? எனக் கேட்பார் சில சமயங்களில் அவர் எவ்வாறு அறிந்து கொள்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. 

நாம் வேலை செய்யும் இடங்களில் ஒரே கருத்துடையவர்கள் ஒரே சிந்தனை உள்ளவர்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் நாம் மேற்கொள்வது மக்களுக்கான பணியே அல்லாமல் அரச பணி அல்ல இதை அனைவரும் உணரும்போது மக்களுக்கான சிறந்த சேவையை வழங்க முடியும்.

நான் அடிக்கடி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலில் கூறுவது உங்களுக்கு வேலை சொல்லித் தர நான் வரவில்லை நீங்கள் மக்களுக்கு செய்யும் பணியில் குறைபாடுகள் இருந்தால் தீர்வையும் வழங்கிவிட்டு என்னிடம் கூறுங்கள் என்றே கூறியிருக்கிறேன்.

ஆகவே யாழ்.மாவட்டத்தில் உயரிய பல சேவைகளை செய்த அரச அதிபர்கள் சேவை செய்த ஆசனத்தில் நானும் அமர்ந்து அரச அதிபராக மக்களுக்கான பணியை வழங்கியுள்ளேன் என்ற மன நிறைவுடன் செல்கிறேன் மீண்டும் சந்திப்போம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு