புதிய வாகன பதிவின்போதும், வாகன உரிமையாளர் மாற்றத்தின்போதும் இனி இது இல்லையாம்! சாரதி அனுமதிப்பத்திர புள்ளியிடல் குறித்தும் வர்த்தமானி...
புதிதாக வாகனங்களை பதிவு செய்யும்போதும், வாகன உரிமையாளர் மாற்றத்தின்போதும் புதிய இலக்க தகடுகளை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தொிவித்திருக்கின்றார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,ஜனவரி முதலாம் திகதி முதல் புதிதாக வாகனங்களை பதிவு செய்யும் போதும், உரிமையாளர்கள் மாற்றப்படும்போதும் இலக்கத் தகடுகளிலுள்ள மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் உரிமை மாகாணங்களுக்கு இடையில் மாற்றப்படும் ஒவ்வொரு முறையும் இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டியிருக்கும்போது வாடிக்கையாளர்களும் போக்குவரத்து திணைக்களமும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ள நேரிட்டுள்ளது.
வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது வாடிக்கையாளர்கள் மற்றும் போக்குவரத்து திணைக்களம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலகுபடுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும்போது , சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு 24 புள்ளிகள் வழங்கப்படவுள்ளன. அதனையடுத்து, சாரதிகள் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டால் 24 புள்ளிகள் நிறைவடையும் பட்சத்தில் குறித்த சாரதியின், அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும்.
இவ்வாறு அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் நபர் அதற்காக ஒரு வருட காலத்திற்குப் பிறகு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். குறித்த புள்ளி வழங்கும் முறைமை தொடர்பில் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றார்.