SuperTopAds

கோர விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்!! -உடல் முழுவதும் காயம்; காலும் முறிந்தது-

ஆசிரியர் - Editor II
கோர விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்!! -உடல் முழுவதும் காயம்; காலும் முறிந்தது-

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப்பண்ட் இன்று வெள்ளிக்கிழமை காலை டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். 

காரை அவரே செலுத்திச்சென்ற நிலையில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி வீதி தடுப்பில் மோதியது. இதில் வீதி தடுப்புகளை உடைத்து கொண்டு கார் சில அடி தூரம் சென்று நின்றது. 

இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. வீதி தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. உடனே ரிஷப் பண்ட் காரில் இருந்து வெளியேற முயற்சித்தார். கார் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்தார். 

காரில் தீப்பிடித்ததால் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார். விபத்து குறித்த தகவலறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரிஷப் பண்டை மீட்டு அப்பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலை காயங்களுக்கு கட்டு போடப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.