SuperTopAds

இலங்கை அரசுடன் அல்ல மக்களுடன் உறவாடவே சீன மக்கள் விரும்புகிறார்கள்! யாழில் சீன துாதுவர் புளகாங்கிதம்...

ஆசிரியர் - Editor I
இலங்கை அரசுடன் அல்ல மக்களுடன் உறவாடவே சீன மக்கள் விரும்புகிறார்கள்! யாழில் சீன துாதுவர் புளகாங்கிதம்...

சீன மக்கள் இலங்கை அரசாங்கத்துடன் உறவாடுவதை விட மக்களுடனே உறவை பலப்படுத்த விரும்புகின்றனர். என இலங்கைக்கான சீன தூதரக பிரதி தூதர் ஹுவோய் தெரிவித்திருக்கின்றார். 

நேற்று வியாழக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சீன செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பில் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாம் நன்கு அறிவதோடு எமது கொழும்புத் தூதரகத்திலும் மின் வெட்டு இடம்பெறுகிறது.

இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்ற நிலையில் சீன மக்களினால் இலங்கை வாழ் மக்களுக்கு பல்வேறு உதவி திட்டங்கள் வழங்கப்பட்டது. சீன மக்கள் இலங்கை அரசுடனான உறவை வளர்த்துக் கொள்வதைப் பார்க்கிலும் 

மக்களுடனான உறவை வளர்ப்பதையே அதிகம் விரும்புகின்றனர். நான் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது இங்கு பல விடயங்களை அவதானித்தேன். யாழ்.கோட்டையைப் பார்க்க சென்றபோது 

அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினேன். அது மட்டுமல்ல அது யாழ்ப்பாணத்தில் உள்ள அருங்காட்சியம் ஒன்றுக்கு சென்றபோது அங்கு பழமை வாய்ந்த சீன நாட்டினுடைய பொருள் ஒன்று இங்கு புழக்கத்தில் இருந்ததை அவதானித்தேன்.

சீனாவுக்கும் யாழ்ப்பாணத்துக்குமான தொடர்பு பழமை வாய்ந்த உறவு என்பதை அருங்காட்சியத்தில் கண்ட பொருளை அவதானித்தபோது அறிந்து கொண்டேன். வடக்கு மக்களுக்கு சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிற நிலையில் 

எதிர்வரும் மாதங்களில் அரிசி முதல் மண்ணெண்ணெய் வரை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது வைத்தியசாலைகளுக்கான மருத்துவ பொருட்கள் 

பாடசாலை மாணவர்களுக்கான ஆடைகள் மற்றும் சிறுவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து வழங்குவதற்கு உத்தேசித்துள்ளோம். ஆகவே இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு 

சீனாவும் சீன நாட்டு மக்களும் எவ்வகையான உதவிகளை மேற்கொள்ள வேண்டுமோ அனைத்தையும் வழங்க தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.