மசாஜ் நிலையத்தில் திருப்திகரமான சேவை இல்லையாம், 5 ஆயிரம் ரூபாய் வாங்கிவிட்டார்களாம்...! போதையில் அட்டகாசம் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது..
மசாஜ் நிலையத்தில் தனக்கு திருப்திகரமான சேவை வழங்கவில்லை. என கூறி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறுகோரி பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்ப்ட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை, கொள்ளுப்பிட்டி, கடற்கரை வீதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையத்துக்கு சென்றுள்ள குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள்,
அங்கு 5 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து சேவையைப் பெற்றுக்கொண்டுள்ளார். பின்னர் நேராக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையம் சென்றுள்ள அவர், மசாஜ் நிலையத்தில் 5 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டு அவர்கள் வாக்குறுதியளித்தவாறு தனக்கு திருப்திகரமான சேவையை வழங்கவில்லை என கூறி முறைப்பாடு பதிவு செய்யுமாறு பொலிஸ் அதிகாரிகளை வற்புத்தியுள்ளார்.
தனது முறைப்பாட்டை ஏற்காவிடின் உயரதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்வேன் என எச்சரித்து, பொலிஸ் நிலையத்தினுள் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக அவர் நடந்துகொண்டதாக பொலிஸார் கூறினர்.
மது போதையிலிருந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை இதன்போது, கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக கைது செய்த கொள்ளுப்பிட்டி பொலிஸார், கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்து 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்துள்ளனர்.