யாழ்.வல்லையில் சோளார் மின் விளக்குகளை இலக்குவைத்து கள்ளர்கள் தொடர் கைவரிசை! வலி,கிழக்கு பிரதேசசபை வருத்தம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்லையில் சோளார் மின் விளக்குகளை இலக்குவைத்து கள்ளர்கள் தொடர் கைவரிசை! வலி,கிழக்கு பிரதேசசபை வருத்தம்...

யாழ்.வல்லை பகுதியில் வலி,கிழக்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட இரு சோளார் மின் விளக்குகள் கள்ளர்களால் களவாடப்பட்டுள்ள நிலையில், 

மின் விளக்குகளின் சில பாகங்கள் மட்டும் பற்றைக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் பிரதேசசபையினால் நேற்று மீட்கப்பட்டிருக்கின்றது. தற்போதைய சூழலில் ஒரு சோளார் மின் விளக்கின் பெறுமதி 2 லட்சம் ரூபாயாக உள்ள நிலையில், 

தொடர்ச்சியாக கள்ளர்கள் களவாடி வரும் நிலையில் வல்லை வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள், பாதுகாப்பு தரப்பினர், பொலிஸார் கூட கண்காணித்து அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை எடுக்கவில்லை என பிரதேசசபைகள் பகிரங்கமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளன. 

அண்மையில் கரவெட்டி பிரதேசசபையினால் பொருத்தப்பட்ட மின் விளக்குகளும் களவாடி செல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பாக வலி,கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோஷை தொடர்பு கொண்டு கேட்டபோது, 

நாட்டில் தற்போது பொருட்களின் விலையேற்றம் கணிசமாக காணப்படுகின்றது. இந்நிலையில் ஒரு விளக்கு 2 லட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்கிறோம். அதனை அடியோடு வெட்டி எடுத்துச் செல்வது வேதனையான விடயம். 

பொதுமக்களின் நன்மை கருதி குறித்த மின் விளக்குகளை நாங்கள் பொருத்தினோம் ஆனால் பொதுமக்களே அவற்றை பாதுகாக்க தவறுகிறார்கள். எனவே அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சகல சோளார் விளக்குகளையும் அகற்றி வேறு தேவையான இடங்களுக்கு பொருத்த தீர்மானித்துள்ளோம். 

பெருமளவு நிதியை செலவிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தை பாதுகாக்கவேண்டியது அனைவருக்கும் பொதுவான கடமை. அதனை செய்யாதபோது மிச்சமாக உள்ளதையாவது பாதுகாத்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் வேறு இடங்களில் பயன்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு