ஆசிரியையின் சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்!
ஆசிரியை ஒருவருடைய சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிய வழிப்பறிக் கும்பலை மடக்கிய பொலிஸ் அதிகாரி மீது வழிப்பறிக் கும்பல் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் கம்பளை பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கம்பளை மறியாவத்தை பிரதேசத்தில் வைத்து ஆசிரியை ஒருவரின் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியினை பறித்த வழிப்பறி கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
மேற்படி சம்பவம் குறித்து கம்பளை கண்டி வீதியில் ஹெரோயின் போதைப்பொருள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயரதிகாரிக்கு தெரியவந்ததையடுத்து குறித்த திருடர்களை முச்சக்கர வண்டியில் பின் தொடர்ந்து சென்று கம்பளை போத்தலா பிட்டிய பிரதேசத்தில் வைத்து இடைமறித்து கைது செய்ய முற்பட்டபோது,
குறித்த இரு திருடர்களும் தாங்கள் அணிந்திருந்த தலைகவசத்தால் சரமாரியாக பொலிஸ் அதிகாரியை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தின் பின்னர் புகையிரத பாதையில் ஒழிந்திருந்த கொள்ளையர்களில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு,
சந்தேக நபரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளிலிருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கில் களனி விகாரைக்கு சுற்றுலா வந்திருந்த நபர் ஒருவரிடமிருந்து திருடியது என்பது தெரியவந்துள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வாருகின்றனர்.