மிருசுவில் படுகொலையின் 22ம் ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றது..
யாழ்.மிருசுவிலில் 2000 ஆம் ஆண்டு இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட 8 அப்பாவி பொதுமக்களின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.
சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிஷோரின் ஏற்பாட்டில் மிருசுவில் தேவாலயத்திற்கு முன்னால் காலை 10.30 மணிக்கு அஞ்சிலி இடம்பெற்றது.
நினைவேந்தல் நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரை தனது மூன்று பிள்ளைகளும் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களின் தாயார் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டவர்களின் பெற்றோர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,
சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க.வாமதேவன் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
தமது வீடுகளை விட்டு வெளியேறிய எட்டுப் பொதுமக்கள் தமது வீடுகளைச் சென்று பார்ப்பதற்காக யாழ்.நகரில் இருந்து 16 மைல்கள் தொலைவில் உள்ள மிருசுவிலுக்குச் சென்ற போது 2000 திசம்பர் 19 இல் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் 2000 டிசம்பர் 20 இல் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டார்கள்.
மிருசுவிலில் இருந்து உடுப்பிட்டிக்கு இடம்பெயர்ந்த சில அகதிகள் தமது வீடுகளையும், உடமைகளையும் பார்ப்பதற்காகவும் அங்குள்ள காட்டில் விறகு வெட்டி வரவும்
உள்ளூர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்று திசம்பர் 19 ஆம் நாள் மிருசுவிலுக்குச் சென்ற வேளை அரைகுறையாக புதையுண்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலத்தை அங்கு கண்டிருந்தனர்.
அவர்களுள் சிலர் தமது குடும்பத்தவர்களுடன் இத் தகவலை பகிர்ந்து கொண்டுமிருந்தனர்.
அடுத்த நாள் அதே பகுதிக்குச் சென்று குறித்த சடலத்தை அடையாளங் காண முற்பட்டவேளை அங்கு நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினரிடம் அகப்பட்டுக் கொண்டார்கள்.
இவர்களுள் எட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியிலுள்ள பொதுமகனொருவரது வீட்டு மலசலகூடக் குழியினுள் வீசப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பொன்னுத்துரை மகேசுவரன் என்பவர் பலத்த காயங்களுடன் இத்தாக்குதல்களில் இருந்து தப்பி வந்து தனது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததை அடுத்தே இக்கொலைகள் பற்றிய விபரங்கள் தெரிய வந்தன.
அவர் வழங்கிய தகவலிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் மலசலகூட குழியிலிருந்து பின்னர் காவல்துறையினரால் மீட்கப்பட்டிருந்தது.
கொல்லப்பட்டவர்களில் மூவர் பதின்ம வயது சிறுவர்களும் ஐந்து வயதுச் சிறுவன் வில்வராசா பிரசாத் ஆகியோர் அடங்குவர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் 5 வயதிற்கும் 41 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.