இலங்கையில் ஒரு தனிநபரின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் 13810 ரூபாய் தேவை! யாழ்.மாவட்டத்தில் 13477 ரூபாய்...
இலங்கையில் ஒரு தனிநபர் தனது அத்தியாவசிய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதற்கு அவருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 13810 ரூபா தேவைப்படுகிறது என புள்ளிவிபரவியல் மற்றும் தொகை மதிப்பு திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
(ஒக்டோபர் மாத தரப்படுத்தல்) மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாழ்க்கை செலவு தரப்படுத்தலுக்கமைய கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவரது ஒருமாத அடிப்படை தேவைகளுக்கான செலவு 14,894 ரூபாவாக காணப்படுவதுடன், மொனராகலை மாவட்டத்தில் வாழ்பவரின் ஒருமாத செலவு 13,204 ரூபா என திணைக்களம் வாழ்க்கை செலவு சுட்டியை தரப்படுத்தியுள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிட்ட தரப்படுத்தல் அறிக்கையில் தேசிய மட்டத்திலான மாத செலவு 13,772 ரூபாவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஒக்டோபர் மாதம் வாழ்க்கை செலவு 13,810 ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவ்வாறாயின் இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை செலவு 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதம் கொழும்பு மாவட்டத்தின் தனிநபர் வாழ்க்கை செலவு 14,854 ரூபாவாக காணப்பட்டது, ஒக்டோபர் மாதம் இந்த தொகை 14,894 ரூபாவாக காணப்படுகிறது, அவ்வாறாயின் இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை செலவு 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியில்
கொழும்பு மாவட்டத்திற்கு 14,894 ரூபா, கம்பஹா மாவட்டத்திற்கு 14,818 ரூபா
களுத்துறை மாவட்டத்திற்கு 14,496 ரூபா, கண்டி மாவட்டத்திற்கு 14,018 ரூபா
மாத்தளை மாவட்டத்திற்கு 13,999 ரூபா, நுவரெலியா மாவட்டத்திற்கு 14,552 ரூபா
காலி மாவட்டத்திற்கு 14,031 ரூபா, மாத்தளை மாவட்டத்திற்கு 13,487 ரூபா
அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 13,417 ரூபா, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 13,477 ரூபா
மன்னார் மாவட்டத்திற்கு 14,145 ரூபா, மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு 13,796 ரூபா
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13,713 ரூபா, கிளிநொச்சி மாவட்டத்திற்கு 13,342 ரூபா
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 13,885 ரூபா, அம்பாறை மாவட்டத்திற்கு 13,920 ரூபா
திருகோணமலை மாவட்டத்திற்கு 13,455 ரூபா, புத்தளம் மாவட்டத்திற்கு 14,097 ரூபா
அனுராதபுரம் மாவட்டத்திற்கு 13,477 ரூபா, பொலன்னறுவை மாவட்டத்திற்கு 13,513 ரூபா
பதுளை மாவட்டத்திற்கு 13,912 ரூபா, மொனராகலை மாவட்டத்திற்கு 13,204 ரூபா
இரத்தினபுரி மாவட்டத்திற்கு 13,871 ரூபா, கேகாலை மாவட்டத்திற்கு 14,440 ரூபா
என தரப்படுத்தப்பட்டுள்ளது. (இந்த மாவட்டங்களில் வாழும் தனி நபர் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றிக் கொள்ள செலவழிக்கும் குறைந்தப்பட்ட தொகை –ஒக்டோபர் மாத தப்படுத்தல்)