குடும்ப அட்டை ஒரு சட்டரீதியான ஆவணம் அல்ல! வடமாகாணத்திற்கு வெளியே குடும்ப அட்டை நடைமுறையே கிடையாது. மனித உரிமைகள் இணைப்பாளர் கனகராஜ்..
வடமாகாணத்தில் மட்டும் நடைமுறையில் உள்ள குடும்ப அட்டை முறைமை குடும்ப விவரங்களையோ அல்லது வதிவிடத்தையோ உறுதிப்படுத்தும் சட்டரீதியான ஆவணம் அல்ல என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை மனித உரிமைகள் தினத்தன்று சட்டத்துக்கு மனித உரிமைக்கான அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் குடும்ப அட்டை விவகாரம் தொடர்பில் முரண்பாடான சம்பவங்கள் எமது கவனத்திற்கு வருகின்றன. குடும்ப அட்டையில் உள்ள விபரங்களை வைத்து பாடசாலை அனுமதி, பொருட்கள் விநியோகம் மற்றும் ஏனைய உறுதிப்படுத்தல் சார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரு மாணவனின் பாடசாலை அனுமதிக்கு வதிவிடத்தை உறுதிப்படுத்த குடும்ப அட்டையை கேட்பது தவறாகும். அண்மையில் ஏற்பட்ட கொவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலமையில் உணவுப் பொருட்கள் விநியோகம் எரிபொருள் என்பவற்றிற்கு குடும்ப அட்டை மூலம் விநியோகிக்கும் நடமுறை காணப்பட்டது.
வடமாகாணத்துக்கு வெளியில் குடும்ப அட்டை நடைமுறை காணப்படாத நிலையில் சில ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்வதற்காக வடக்கில் அதனை பயன்படுத்துகின்றனர். குடும்ப அட்டை நடை முறை தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு சில பிரதேச செயலகங்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்.பிராந்திய அலுவலகம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.
எமக்கு பிரதேச செயலகங்களால் கிடைக்கப்பெற்ற பதில்களின் அடிப்படையில் குடும்ப விவகாரம் தொடர்பில் பிரதேச செயல்களுக்கு இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே வடமாகாணத்தில் குடும்ப அட்டை நடைமுறையில் இருந்தாலும் அதனை கட்டாயமாக வழங்க வேண்டும்.
அல்லது அதில் உள்ள விடயங்களை காரணமாக குறிப்பிட்டு சட்டரீதியாக அணுக முடியாது என கனகராஜ் மேலும் தெரிவித்தார்.