குர்பாஸ், அவிஷ்க அபாரம்!! -வரலாற்று சாதனையுடன் ஜப்னா கிங்ஸ் வெற்றி-

ஆசிரியர் - Editor II
குர்பாஸ், அவிஷ்க அபாரம்!! -வரலாற்று சாதனையுடன் ஜப்னா கிங்ஸ் வெற்றி-

ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ளை ஓரா அணிகள் இடையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரின் 8 ஆவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 51 ஓட்டங்களால் இலகு வெற்றி பெற்றது. 

நேற்று பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடந்த இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தசுன் ஷானக்க தலைமையிலான தம்புள்ளை ஓரா அணி முதலில் ஜப்னா கிங்ஸ் அணியை துடுப்பாடப் பணித்தது.

அதன்படி போட்டியில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரின் அதிரடித் துடுப்பாட்டத்தோடு 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்கள் எடுத்தது. அத்துடன் இது எல்.பி.எல் போட்டிகள் வரலாற்றில் அணியொன்று பெற்ற கூடுதல் ஓட்டங்களாகவும் மாறியது.

ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் குர்பாஸ், அவிஷ்க ஜோடி முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 133 ஓட்டங்களைப் பகிர்ந்ததோடு ஜப்னா கிங்ஸ் அணியின் முதல் விக்கெட்டான குர்பாஸ் அரைச்சதம் விளாசி 35 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்கள் பெற்றார்.

மறுமுனையில் அவிஷ்க பெர்னாண்டோ 30 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இவர் தவிர இறுதிவரை களத்தில் நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சதீர சமரவிக்ரம 22 பந்துகளுக்கு 6 பௌண்டரிகள் உடன் 38 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இதேநேரம் சற்று மோசமாக அமைந்த தம்புள்ளை ஓரா அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 241 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ளை ஓரா அணி 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

தம்புள்ளை ஓரா அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அதன் தலைவர் தசுன் ஷானக்க 23 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்களை எடுத்திருக்க, பானுக்க ராஜபக்ஷ 31 பந்துகளில் 38 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

ஜப்னா கிங்ஸ் பந்துவீச்சில் பினுர பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்க சுமின்த லக்ஷான் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்து தமது அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு