SuperTopAds

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசவேண்டிய விடயங்கள் குறித்து ஆராயும் கூட்டம்! கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களை காணவில்லை என தகவல்...

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசவேண்டிய விடயங்கள் குறித்து ஆராயும் கூட்டம்! கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்களை காணவில்லை என தகவல்...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தரப்புகள் சந்திப்பது தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கி அதன் மூலம் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. 

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பின்னர் சந்திப்பின்போக்கு தொடர்பாக மீண்டும் கூடிக் கலந்துரையாட முடிவெடுக்கப்பட்டது. தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரனின் ஏற்பாட்டில் யாழ்.இராமநாதன் வீதியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஆரம்பித்த குறித்த கலந்துரையாடல் இரவு 10 மணிவரை நடைபெற்றது. 

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பாக இலங்கை அரசிற்கும் தமிழ்த் தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில், தமிழர் தரப்பு எவ்விதமான நோக்கு நிலையில் அணுகுவது தொடர்பிலும் அதுசார்ந்த பொறிமுறையை உருவாக்குவது தொடர்பாக தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், 

கருத்தியலாளர்களுக்கும் இடையே இந்த கூட்டுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பொ.ஐங்கரநேசன் பா.கஜதீபன், க.அருந்தவபாலன், கே.பி.தவராசா உள்ளிட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், பத்திரிகை பிரதம ஆசிரியர்கள், அரசியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

எனினும் குறித்த கலந்துரையாடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. 

இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றாத ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் என்ன பேச வேண்டும் என்பது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுடைய தலைவர்கள் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள்.

குறித்த கலந்துரையாடலில் தேவையற்ற விடயங்களை பேசி சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். எனினும் கலந்துரையாடலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிவித்தபடியால் கட்சி சார்ந்த பிரதிநிதி ஒருவரை அனுப்பியுள்ளோம் என தெரிவித்தார்.