இன்று குளிர் மேலும் அதிகரிக்கும், 11ம் திகதிவரை மழை தொடரும், முதியவர்கள், நோயாளிகள் வெளியில் நடமாடாமல் இருப்பது சிறந்தது! நா.பிரதீபராஜா..

ஆசிரியர் - Editor I
இன்று குளிர் மேலும் அதிகரிக்கும், 11ம் திகதிவரை மழை தொடரும், முதியவர்கள், நோயாளிகள் வெளியில் நடமாடாமல் இருப்பது சிறந்தது! நா.பிரதீபராஜா..

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள “மண்டாஸ்” புயல் வடமேற்கு திசைநோக்கி நகரும் நிலையில் புயலின் தற்போதைய நிலையில் இலங்கைக்கு பாதிப்பு எதுவுமில்லை. எனினும் வடமாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணம் ஆகியவற்றில் 11ம் திகதிவரை கனமழை பெய்யும் எனவும் கூறியிருக்கின்றார். 

மேற்கண்டவாறு யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா, நேற்றிரவு 7 மணிக்கு வழங்கிய நிகழ்நிலை தகவலில் கூறியிருக்கின்றார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் 'மண்டாஸ்' புயலானது தீவிர புயலாக மாறியுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை(09.12.2022) நள்ளிரவுக்கும் நாளை மறுதினம் (10.12.2022) காலைக்கும் இடையில் இந்தியாவின் தமிழ்நாட்டின் மரக்காணத்துக்கும் மகாபலிபுரத்துக்கும் இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 புயலின் தற்போதைய நிலையில் இதனால் இலங்கையின் எப்பகுதிக்கும் நேரடியான பாதிப்பு கிடையாது. ஆனால் எதிர்வரும் 11.12.2022 வரை வடக்கு மாகாணத்தின் முழுப் பிரதேசத்துக்கும், கிழக்கு மாகாணத்தின் முழுப்பிரதேசத்துக்கும் மற்றும் வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

அத்தோடு இன்றும், நாளையும் காலை வரை நேற்றுடன் ஒப்பிடும்போது காற்றின் வேகம் அதிகரித்தும் காணப்படும். கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-65 கி.மீ. வரையும் உள் நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35-45 கி.மீ. வரையும் வீசும் வாய்ப்புள்ளது.

நேற்றைய தினம் வளிமண்டல வெப்பநிலை 22 பாகை செல்சியஸ் ஆக காணப்படுகின்றது. ஆனால் உணரக்கூடிய வெப்பநிலையானது ( Feeling Temperature) 18 பாகை செல்சியஸ் ஆக உள்ளது. நேற்றைய தினம் வளிமண்டல சாரீரப்பதன் அளவு 88% ஆக உள்ளது. 

நேற்றும் இரவும் இன்றும்(09.12.2022) வெப்பநிலை மேலும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு ஈரப்பதன் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதனால் உணரக்கூடிய வெப்பநிலை அளவு மேலும் குறைவடையலாம். 

இதனால் நேற்றையை விட இன்று இன்னமும் குளிரான வானிலை நிலவக்கூடும். சற்று வேகமான காற்றுடன் கூடிய தொடர்ச்சியான மழை, ( சிலவேளைகளில் இடிமின்னலுடனும் மழை கிடைக்க கூடும்) குளிரான வானிலை, குறைவான கட்புலனாகு தன்மை( Visibility) போன்ற வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இன்றைய தினம் ஆகக் குறைந்தது பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறையை அறிவிப்பது உசிதமானது. 

அத்தோடு முதியவர்கள், நோயாளிகள் மற்றும் ஏனையவர்கள் இன்றைய தினம் நடமாட்டத்தை குறைப்பது நன்மை தரும். 'மண்டாஸ்' புயலின் காரணமாக கடல் அலைகள் உயர்வாக இருக்கும் என்பதனால் எத்தகைய காரணத்தைக் கொண்டும் கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு