“மண்டாஸ்” புயல் கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும்! யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..
வங்காள விரிகுடாவில் பருத்தித்துறைக்கு கிழக்காக 492 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் மண்டாஸ் புயலாக மாறியுள்ளது.
தற்போது இதன் மையப்பகுதியின் அமுக்கமானது 997 மி.பா. ஆக மாறியுள்ளது. இது நாளை அதிகாலை 3.00 மணியளவில் 995 மி.பா. ஆகவும் இன்று பிற்பகல் 994மி.பா. ஆகவும் குறைவடைய வாய்ப்புக்கள் உண்டு.
ஏற்கெனவே அறிவித்தபடி இதற்கு 'மண்டாஸ்' என பெயரிடப்படும். இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 09.12.2022 இரவு அல்லது 10.12.2022 அருகே இந்தியாவின் தமிழ்நாட்டின் மரக்காணம் மற்றும் மகாபலிபுரத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலின் நகர்வுப் பாதை தற்போது வரை எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலிருந்து சற்றுத் தொலைவிலேயே அமைவு பெற்றுள்ளது.
எனவே இந்த புயலினால் எமக்கு நேரடியான எத்தகைய பாதிப்பும் இடம்பெறாது. எனினும் இன்று முதல் (08.12.2022) குறிப்பாக நண்பகலுக்கு பின்னரிலிருந்து மழை கிடைக்க தொடங்கும்.
இது எதிர்வரும் 11.12.2022 வரை நீடிக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் மிதமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
காற்றைப் பொறுத்தவரை கரையோரப் பகுதிகளில் மணிக்கு 40-60 கி.மீ.வேகத்திலும் உள்நிலப்பகுதிகளில் மணிக்கு 30-45 கி.மீ. வேகத்திலும் வீசும் வாய்ப்புள்ளது.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம்.
நாம் புயலின் நகர்வுப் பாதையிலிருந்து விலகியே இருப்பதனால் பாதிப்பு தொடர்பாக நாம் அதிகம் பீதி கொள்ள தேவையில்லை.
ஆயினும் சற்று வேகமான காற்றுடன் கூடிய கனமழையை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பது அவசியம். அதே வேளை புதிய தாழமுக்கம் ஒன்று எதிர்வரும் 12.12.2022 அன்று
மத்திய வங்காள விரிகுடாவில் தோன்றுவதற்குரிய ஏதுநிலைகள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. என யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார்.