ஆயுத குழு வீடு புகுந்து குடும்பத்திற்கு அச்சுறுத்தல்!! -கால்பந்து உலகக்கிண்ண தொடரைவிட்டு அவசரமாக நாடு திரும்பிய இங்கிலாந்து வீரர்-
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணியின் முன்கள வீரர் ரஹீம் ஸ்டேர்லிங், கத்தாரிலிருந்து அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.
அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்தபோது ஆயுதம் தாங்கிய குழுவினர் வீட்டிற்குள் புகுந்ததால் அவர் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. ஸ்டேர்லிங்குக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
சில நேரங்களில் கால்பந்தாட்டம் முக்கியமாகப் படுவதில்லை. மாறாக குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிவரும் என இங்கிலாந்து பயிற்றுநர் கெரத் சவுத்கேட் தெரிவித்தார்.
சிரமமான இவ்வேளையில் அவர் குடும்பத்தாருடன் இருப்பதன் அவசியத்தை உணர்வதாகக் குறிப்பிட்ட சவுத்கேட், அடுத்த சில தினங்களுக்கு அவரது குடும்ப நிலை குறித்து கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறினார்.
ஈரானுக்கு எதிரான உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் கோல் போட்ட ரஹீம் ஸ்டேர்லிங், அமெரிக்காவுடனான போட்டியிலும் விளையாடி இருந்தார். வேல்ஸுடனான போட்டியில் அவர் விளையாடவில்லை.
இங்கிலாந்து உலகக் கிண்ண குழாத்திலிருந்து வெளியேறிய இரண்டாவது வீரர் ஸ்டேர்லிங் ஆவார். சில தினங்களுக்கு முன்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக பென் வைட் நாடு திரும்பியிருந்தார்.
சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் உள்ள செஷயரில் அப்போதிருந்த ஸ்டேர்லிங்கின் வீடு உட்பட சில வீடுகளுக்குள் புகுந்த மூன்று கொள்ளையர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.