SuperTopAds

குடிநீர் திட்டத்திற்காக உலக வங்கி வழங்கிய 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி திருட்டு! அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி பணிப்பு, வடக்கில் நடந்த சம்பவம்..

ஆசிரியர் - Editor I
குடிநீர் திட்டத்திற்காக உலக வங்கி வழங்கிய 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி திருட்டு! அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி பணிப்பு, வடக்கில் நடந்த சம்பவம்..

குடிநீர் திட்டத்திற்காக உலக வங்கியினால் ஒதுக்கப்பட்ட 6 ஆயிரம் மில்லியன் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதியின் செயலாளர் எக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். 

மேற்படி தகவலை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டிருக்கின்றார். இது குறித்து அவர் மேலும் தொிவித்ததாவது, 

கரும்புள்ளியான் குடி நீர் திட்டத்திற்கு உலக வங்கியினால் ஒதுக்கப்பட்ட நிதி, அதிகாரிகளால் தென் பகுதிக்கு மாற்றப்பட்டு கரும்புள்ளியான் குடி நீர் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, பொது மக்களால் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

எனவே இது தொடர்பில் வரவு செலவு திட்டத்திற்கு முன் இடம்பெற்ற நிதி ஆலோசனை குழு கூட்டத்தில் கடந்த 15 ஆம் திகதி நான் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

அதனைத்தொடர்ந்து, 16 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புவேளை பிரேரணைக்கு கொண்டு சென்றேன். இதில் என்னோடு இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் ரிசாட் பதியூதீன் ஆகியோர்

விடயத்தை பேசியிருந்தார்கள் தொடர்ந்து கரும்புள்ளியான் விடயம் தொடர்பில் பேசுவதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்த கூட்டத்தில் அதிகாரிகள் கருத்து தெரிவித்தபோது கரும்புள்ளியான் குடி நீர் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 15 மில்லியன் ரூபா திறைசேரிக்கு மாற்றப்பட்டதாகவும் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த காலம் போதாது எனவும்,

கொரோனா காரணமாகவும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்தனர். நாட்டில் கரும்புள்ளியான் கிராமத்தில் மட்டும்தானா கொரோனா தாக்கம் ஏற்பட்டது எனக் கேள்வி எழுப்பிய நான் கடுமையான ஆட்சேபனையை தெரிவித்தேன்.

மேலும் கூட்டத்தில் இருந்தும் இடைநடுவில் வெளியேறினேன். தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வவுனியா வந்தபோது அவரது கவனதிற்கு கொண்டுசென்ற போதே அவர் தனது செயலாளருக்கு

விடயத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.