அப்பட்டமான பொய்யுரைக்கிறார் நீதியமைச்சர்!

ஆசிரியர் - Admin
அப்பட்டமான பொய்யுரைக்கிறார் நீதியமைச்சர்!

காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகத்திற்கு எதிராக வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து நாங்கள் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக நீதியமைச்சர் சபையில் குறிப்பிட்ட விடயம் முற்றிலும் பொய்யானது. இவரது கருத்தை முற்றாக கண்டித்து, நிராகரிக்கிறேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.     

தோல்வியடைந்த ஒற்றையாட்சி முறைமையை நீக்கி சுய நிர்ணயத்தை அங்கிகரிக்கும் வகையில் சமஷ்டியாட்சி முறைமை உருவாக்கப்பட வேண்டும்.

பூகோள அரசியல் செயற்பாட்டை இனவாதத்தை விடுத்து அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். சமஷ்டியே பொருளாதார மீட்சிக்கான இறுதி தீர்வு எனவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கடந்த வாரம் எனது பெயரை குறிப்பிட்டு சபையில் உண்மைக்கு புறம்பான பொய் ஒன்றை முன்வைத்துள்ளார். கடந்த மாதம் 31ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடமாடும் சேவை ஒன்று இடம்பெற்றது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றை உள்ளிடக்கிய வகையில் இந்த நடமாடும் சேவை இடம்பெற்றது. காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் செயற்பாடுகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விமர்சிக்கிறார்கள், புறக்கணிக்கிறார்கள்.

நீதியமைச்சர் வருகை தந்த போது 'எமது உறவுகள் எங்கே' என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எமக்கு அழைப்பு விடுத்தார்கள், அதற்கமைய நானும் போராட்டத்தில் கலந்துக் கொண்டேன். நீதியமைச்சர் யாழ்ப்பாண செயலக பிரிவில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டதை அறிந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் அங்கு சென்று அவரிடம் சில கேள்விகளை கேட்க முற்பட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்.

இவ்விடத்தில் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிராகவும், இழப்பீட்டு அலுவலகத்திற்கு எதிராக மாத்திரமே எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டதே இந்தியாவில் இருந்து வருகை தந்த இலங்கையர்களை மீள்குடியமர்த்தும் செயற்பாடுகளுக்கும், நடமாடும் சேவைக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் எவரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அவதானத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். காணாமலாக்கபட்டோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கு எதிரான உறவுகளின் எதிர்ப்பை மறைத்து நீதியமைச்சர் நடமாடும் சேவைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தென்னிலங்கை மக்களிடமும், வடக்கு மக்களிடமும் அப்பட்டமான பொய்யுரைத்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த முயற்சிப்பாராயின் அவர் பொய்களை விடுத்து உண்மை தன்மையுடன் செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன என்பது குறித்து அவதானம் செலுத்தி அதற்கமைய செயற்பட வேண்டும், இல்லாவிடின் இந்த நாடும் மென்மேலும் பாதிக்கப்படும் ஆகவே நீதியமைச்சரின் பொய்யான கருத்தை வன்மையாக கண்டித்து நிராகரிக்கிறேன்.

ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயற்படும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடக்கு மக்களின் காணிகளை இராணுவத்தினருக்கு சுபீகரித்துக் கொடுக்க முயற்சிக்கிறார். தேவையற்ற பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் வடக்கு மாகாண ஆளுநர் செயற்படுகிறார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சாதகமாக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை.

பாதுகாப்பு அமைச்சுக்கு இந்த வருடத்தை காட்டிலும் 50 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படைகளில் நான்கில் மூன்று பகுதியினர் வடக்கில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். இராணுவத்தினரால் வடக்கு மற்றும் கிழக்கு பொருளாதாரம் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இராணுவத்தினர் அதிகம் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் போதைப்பொருளின் மையமாக யாழ்ப்பாணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மகாவலி அபிவிருத்தி அதிகார சபை இன முரண்பாடுகளுக்கு வித்திட்டுள்ளது. ஆகவே மகாவலி அபிவிருத்தி அதிகார சபை முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும். தமிழ் மக்களின் விவசாய உரிமைகளும் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. போரினாலும், இன அழிப்பினாலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சார்பான எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது.

புலம் பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் அரசாங்கம் அதிகார பகிர்வு குறித்து அவதானம் செலுத்தவில்லை. தோல்வியடைந்துள்ள ஒற்றையாட்சி முறைமையை இல்லாதொழித்து சமஷ்டியாட்சி முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

சுயநிர்ணய உரிமைக்கு அங்கிகாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினால் பொருளாதாரத்தை முன்னேற்ற முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம்.

பூகோள போட்டி தன்மை தீவிரமடைந்துள்ள போது இனவாதம் தவிர்த்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.இந்த ஆட்சியில் வடக்கில் இராணுவ மயமாக்கல் தீவிரப்படுத்தப்படுகிறது. தமிழ் தேசத்தை அழிக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு