யாழ்.நல்லுாரில் உள்ள தியாகி திலீபனின் நினைவு துாபி முன்பாக மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்கு..
யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் உள்ள தியாகி திலீபனின் நினைவு துாபியின் முன்பாக மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
நவம்பர் 21ம் திகதி காலை 9மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள இக் கல்வெட்டுக்கள் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும். அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தமுடியும்.
இதற்கு அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டுமென யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன்கோரிக்கை விடுத்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இந்த கோரிக்கையை விடுத்தார்.
மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக யாழ் மாநகர சபைக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதிகளை பெற்று குறித்த கல்வெட்டுக்கள் வைக்கப்படவுள்ளது.
உயிரிழந்த உறவுகளை நினைவு கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில் எமது உறவு சகோதர சகோதரிகளை நினைவு கொள்வது யாரும் தடுக்க முடியாது என்றார்.