அனைவரும் ஓரணியாக விளக்கேற்ற முன்வாருங்கள்!
வடக்கு, கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அரசியல் கட்சி வேறுபாடுகள் மறந்து அனைவரும் ஒன்றிணைந்து விளக்கேற்ற முன்வரவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள், நேற்றுக் காலை ஆரம்பமாகின.
தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை கிளையின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நடாத்தப்பட்ட சிரமதானத்தில் பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் உட்பட கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சிரமதானத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய அரியநேத்திரன் தெரிவித்ததாவது,
உயிரிழந்த மாவீரர்களின் பெற்றோர்கள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள் எனவும் வருடா வருடம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நாம் நினைவு கூர்ந்திருக்கிறோம் எனவும் தெரிவித்த அவர், மாவடி முன்மாரி துயிலும் இல்லத்துக்கு தனியாக வந்து 2011 ஆம் ஆண்டு நினைவு மாவீரர்களை நினைவு கூர்ந்ததாக குறிப்பிட்டார்.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளால், எங்களுக்கெதிராக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டதன் காரணமாக நாங்கள் வீடுகளிலேயே மாவீரர்களை நினைவு கூர்ந்திருந்தோம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஆனால் இவ்வருடத்தில் அவ்வாறில்லாமல் இயல்பு நிலை திரும்பியிருக்கிறது என்ற காரணத்தினால் இவ்வருடம் அக்கெடுபிடி இருக்காது என நினைப்பதாகவும் தெரிவித்தார்.
வடக்கு- கிழக்கில் உள்ள 33 மாவீரர் துயிலும் இல்லங்களில் சிலவற்றில் படையினர் தங்கியுள்ளனர் என்றும் மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் படையினர் தற்போதும் நிலைகொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்ட அவர், 2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் எவ்வாறு விளக்கேற்றினோமோ அதேபோல விளக்கேற்றவுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தவருடம், அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தில் பொதுமக்களாகிய நீங்கள் உங்களுக்கு வசதியான மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் சென்று, விளக்கேற்றி எமது மாவீரர்களை நினைவு கூருவது எங்கள் கடமை என்றும் பொதுமக்களுக்கு பகிரங்க அழைப்பை விடுப்பதாகவும் கூறினார்.
வடக்கு, கிழக்கிலுள்ள 33 துயிலும் இல்லங்களிலும், அதற்கண்மித்த இடங்களிலும் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உரிய தரப்புக்கள் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் எதிர்வரும் 27 ஆம் திகதி அனைத்து பேதங்களையும் மறந்து, ஒன்று திரண்டு ஓரணியாக வந்து எமது உறவுகளை நினைவு கூருவோம் என்றும் தெரிவித்தார்.