மீண்டெழும் கூட்டங்களை நிறுத்தியது மொட்டு!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்தி பொதுஜன பெரமுனவினால் 'சாம்பலில் இருந்து மீண்டெழுவோம், ஒன்றிணைந்து எழுவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கட்சி கூட்டங்களை தொடர்ந்து நடத்துவதை பொதுஜன பெரமுன தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தி,கட்சியை மறுசீரமைக்காமல் கட்சி மாநாட்டை நடத்துவது தற்போதைய நிலையில் பொருத்தமற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க உட்பட பெரும்பாலான சிரேஷ்ட உறுப்பினர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து கட்சி கூட்டத்தை தொடர்ந்து நடத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுப்படுவதை தவிர்த்திருந்த நிலையில் கடந்த மாதம் பொதுஜன பெரமுனவின் முதலாவது கூட்டம் களுத்துறை நகரில் 'களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்' என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.இதனை தொடர்ந்து நாவலபிட்டிய,புத்தளம் ஆகிய நகரங்களில் கட்சி கூட்டங்கமள் இடம்பெற்றன.
எதிர்வரும் மாதம் கம்பஹா மாவட்டத்தில் கூட்டத்தை நடத்த பொதுஜன பெரமுன தீர்மானித்தது.அரசியல் ஆதரவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்காமல்,கட்சியை முன்னிலைப்படுத்தி கூட்டங்களை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான பிரசன்ன ரணதுங்க,கம்பஹா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கூட்டத்தை நடத்த இடமளிக்க போவதில்லை என பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் கட்சி கூட்டத்தை தொடர்ந்து நடத்துவது சாதகமாக அமையாவது என கருதி பொதுஜன பெரமுன நாடளாவிய ரீதியில் நடத்த திட்டமிட்டிருந்த கூட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.