காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர் என்றால் கொலையாளிகள் யார்? அவர்களுக்கு தண்டணை என்ன? த.தே.கூ முன்னாள் எம்.பி கேள்வி..
காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலருடைய கருத்தாக உள்ள நிலையில், கொலையாளிகள் யார்? என்ன தண்டணை கொடுக்கப்போகிறீர்கள்? என்பதை அரசு வெளிப்படுத்தவேண்டும்.
மேற்கண்டவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கேள்வி எழுப்பினார். காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதை அரசு சார்ந்தவர்களின் வெவ்வேறான கருத்துக்கள் நம்ப வைக்கின்றது.
எனவே, கொலையாளிகளுக்கு என்ன தண்டனையை இந்த அரசு வழங்கப்போகின்றது? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாகத் தமிழ் உறவினர்கள் 13 ஆண்டுகளாக ஏங்கித் தவிக்கின்றனர்.
2050 நாட்களுக்கும் அதிகமாக தெருக்கள் மற்றும் பொதுவான இடங்களில் நின்று கண்ணீரும் கம்மபலையுமாய் போராடி வருகின்றனர். உள்நாட்டிலும், உலக அரங்கிலும் அந்த உறவுகளின் குரல்கள் ஒலிக்கின்றன.
ஆனால், அரச அதிகார வர்க்கத்தினர் காணாமல் ஆக்கபட்டவர்கள் தொடர்பாக பொறுப்பற்ற விதத்திலும், மலினமாகவும், நகைப்பாகவும், நையாண்டியாகவும் பல கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
அவற்றைப் பார்ப்போம்.
1)நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச - காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிரோடு இருப்பதற்கான சாத்தியம் இல்லை.
2) இராணுவத்தினர் - போரின் போது எவரும் எம்மிடம் சரணடையவில்லை.
3) காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக விசாரணை அதிகாரி மகேஷ் - இராணுவத்தால் எவரும் காணாமல் ஆக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவர்கள் விடுதலைப்புலிகளால்தான் காணாமல் ஆகியிருப்பார்கள். காணாமல்போனவர்கள் என்போர் சிலர் வெளிநாடுகளில் உள்ளனர்.
4) விமல் வீரவன்ச (அமைச்சராக இருந்த போது) - காணாமல்போனவர்களை மண்ணைத் தோண்டிப் பாருங்கள்.
5) கோட்டாபய ராஜபக்ச (ஜனாதிபதியாக இருந்த போது) - காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறந்து விடுங்கள்.
இவ்வாறு உள்நாட்டில் அரச சார்பான பொறுப்புள்ள தலைவர்கள், அதிகாரிகள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அதேவேளை, இறுதிப் போரின் போது களத்தில் நின்ற மேஜர் ஹசித சிறிவர்தன வெளிநாட்டில் இருந்தவாறு சில தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று அறியப்படுகின்றது.
அந்தவகையில் வெள்ளைக்கொடியுடன் விடுதலைப்புலிகள் தானறியும் வகையில் சரணடைந்தார்கள் என்றும், அவர்கள் தன்பார்வையில் இருந்தார்கள் என்றும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் (கோட்டாபய ராஜபக்ச) கட்டளைக்கு அமைவாகத் தன்னை அகற்றிவிட்டு பொறுப்பேற்ற தளபதி ஒருவரின் பணிப்பின் பேரில் அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் கடத்தப்பட்டவர்கள், கைதுசெய்யப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என்று நான்கு வகையினர் காணப்பட்டனர்.
இவர்களில் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கான வலிதான சாட்சியங்கள் உறவினர்களாக உள்ளனர். சரணடைந்தவர்களுக்கும் மேஜர் சிறிவர்தன போன்றவர்கள் சாட்சியமாக உள்ளனர்.
இப்படியெல்லாம் இருக்க, அரச தரப்பினரின் கருத்துக்கள் ஒரேவிதமாக இல்லை. அவர்களுள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கருத்து முக்கியமானது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளார்கள்,
அவர்களை மறந்துவிடுங்கள் என்று கூறுகின்றார்.நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச காணாமல் ஆக்கப்பட்டோரின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுவதாகத் தெரிகின்றது.
விமல் வீரவன்சவின் கருத்துப்படி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் மண்ணைத் தோண்டிப் பார்ககச் சொன்னதாகப் பொருள்கொள்ளலாம்.
மனிதர்களைத் தாக்கும் காட்டு விலங்குகளுக்கே கருணை காட்டும் நாட்டுத் தலைவர்கள், தமிழர்கள் விடயத்தில் காட்டும் மெத்தனப்போக்கு அடிப்படைவாத வன்மத்தின் கொடிய போக்கைக் காட்டுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதையும் நம்ப வைக்கின்றது. எனவே, கொலையாளிகளுக்கு என்ன தண்டனையை இந்த அரசு வழங்கப்போகின்றது?" - என்றுள்ளது.