வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் சிலை அமைக்கத் தடை!
வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் அமைக்கப்பட்டு வந்த 18 அடி உயரமான முருகன் சிலை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வன ஜீவராசிகள் திணைக்களம் இந்த தடை உத்தரவை பிறப்பித்து இருப்பதாக ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்தார்.
அத்திவாரம் அமைக்கப்பட்டு பீடம் எழுப்பப்பட்ட நிலையில் இத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முருகன் சிலை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்ட சம்பவமானது, உலகெங்கிலுமுள்ள இந்துக்களின் மனங்களை புண்படச்செய்துள்ளன.
இதனால் அவர்கள் வேதனையும் விரக்தியும் அடைந்துள்ளனர். சம்பவத்தை கேள்வியுற்ற பிரபல சமூக செயற்பாட்டாளரும், காரைதீவு பிரதேச சபை தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஸ்தலத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க வைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க கூறுகையில்...
கடந்த ஏப்ரல் மாதமளவில் வள்ளிஅம்மன் மலையில் வள்ளியம்மன் ஆலயத்திற்கு பின்னால் 18 அடி உயரமான முருகன் சிலை அமைப்பதற்கு அடிக்கல் நட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பமானது. இருந்த போதிலும் ஜூலை மாதமளவில் பணியை நிறுத்துமாறு வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்தது.
ஆரம்பத்தில் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் அனுமதி பெறப்பட்டது. தற்போது கொழும்பு தலைமையகத்தில் இருந்து இத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவிசாளர் ஜெயசிறில் அங்கு கருத்துரைக்கையில்....
இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முற்பட்ட இந்த ஆலயம் மலைகளாலும் மரங்களாலும் சூழப்பட்ட ஒரு பழமையான ஆலயம் . ஆலய வளாகத்தில் உள்ள வள்ளியம்மன் மலையில் முருகன் சிலை அமைக்கப்பட்டு வந்தது .என்ன காரணத்துக்காக இது நிறுத்தப்பட்டதோ தெரியாது.
ஆனால் ,இந்த செயல் முழு இந்துக்களின் மனங்களையும் புண்பட செய்திருக்கின்றது. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக விரைவாக அனுமதியை வழங்கி இந்த செயற்பாட்டை முன் எடுத்துச் செல்ல உதவும் வேண்டும்.
அண்மையிலே இந்தியாவில் ராஜஸ்தானிலே 368 அடி உயரமான உலகின் மிகப்பெரிய சிவன் சிலையை அமைத்து அழகு பார்த்தார்கள். எமது நாட்டிலும் உன்னஸ்கிரிய தொடக்கம் நாட்டின் பல பாகங்களிலும் மிக உயர்ந்த புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன .
ஆனால், இங்கு ஆலய வளாகத்துக்குள் ,அதுவும் ஆலயமருகே எழுப்பப்பட்ட இந்த சிலை நிருமாணம் நிறுத்தப்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை .
பல அரசியல்வாதிகள் சந்தித்ததாக வண்ணக்கர் கூறினார். அவர்களது முயற்சியும் எனது முயற்சியும் சேர்ந்து நல்லதொரு தீர்வை பெற நடவடிக்கையை மேற்கொள்வோம். என்றார்.