கட்சி அரசியலை துயிலுமில்லங்களுக்குள் வலிந்து புகுத்தும் தமிழ் காங்கிரஸ்!
யுத்த காலத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்மாதம் 25-27வரை அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் திட்டமிட்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமது கட்சி அரசியலை வலிந்து துயிலுமில்லங்களுக்குள் புகுத்தும் அநாகரீகமான செயற்பாட்டை மேற்கொள்வதாக ஆலங்குள துயிலும் இல்லத்துக்கான மாவீரர் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் க.பண்பராசா குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்- இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து செயற்பாட்டை மாவீரர்களின் பெற்றோர்களும், முன்னாள் போராளிகளும், விரும்பவில்லை.
ஆலங்குளம் துயிலுமில்லத்துத்துக்குள் அடாவடியாக நுழைந்த குறித்த கட்சியினர் அங்கே அஞ்சலி செலுத்தவும் சிரமதானம் செய்யவும் முற்பட்ட போது சம்பூர் போலீசார் தலையிட்டு அனுமதியற்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட நிலையில் அவர்கள் வெளியேறியிருந்தனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அனைத்துத் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகளை அரசியல் வாதிகளின் தலையீடுகளைத் தவிர்த்துக் கொள்ளவும், குழப்பங்களற்ற வகையிலும் மேற்கொள்ளக் கூடியவாறானதுமான ஏற்பாட்டுக் குழுக்களை அந்தந்தப் பிரதேச மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தோர் மற்றும் முன்னாள் போராளிளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
எனவே அவர்கள் சுதந்திரமாகவும் உணர்வுபூர்வமாகவும் நினைவேந்தலைச் செய்ய அரசியல் வாதிகளும் கட்சிகளும் வழிவிடுவதுடன் மாவீரர் நாளைக் காரணம் காட்டி வெளிநாடுகளில் நிதி வசூல் செய்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.