SuperTopAds

தரம் 5 மாணவர்களை தாக்கியதுடன், மின் அதிர்ச்சி கொடுத்து சித்திரவதை செய்த பொலிஸார்! பாடசாலை அதிபர் உடந்தை, இலங்கையில் நடந்த கொடூர சம்பவம், விசாரணைகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
தரம் 5 மாணவர்களை தாக்கியதுடன், மின் அதிர்ச்சி கொடுத்து சித்திரவதை செய்த பொலிஸார்! பாடசாலை அதிபர் உடந்தை, இலங்கையில் நடந்த கொடூர சம்பவம், விசாரணைகள் ஆரம்பம்..

பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவான பாடசாலைக்குள் புகுந்த பொலிஸ் குழு தரம் 5 மாணவர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

குறித்த சம்பவம் ஹொரண - றைகம பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த 2ம் திகதி இடம்பெற்றதாகவும் மாணவர்களை பரிசோதித்த சட்டவைத்திய அதிகாரி மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. 

தாக்குதல் தொடர்பில் தனிப்பட்ட தகவலாளரிடமிருந்து நவம்பர் 3 ஆம் திகதி தமக்குத் தகவல் கிடைத்ததாகவும், சம்பவம் குறித்து உடனடியாக விசாரணையைத் தொடங்கியதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது. 

பாடசாலையின் வகுப்பறை உடைக்கப்பட்டு ஆசிரியர் ஒருவரின் பணப்பை திருடப்பட்டுள்ளதாக இதுவரை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தரம் 5 மாணவர்கள் மூவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், 

அதிபர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். தரம் 5 மாணவர்களைக் கொண்ட குழுவை அதிபரும் ஆசிரியரும் சேர்ந்து அடித்துத் தாக்கி, பொலிஸாருக்கு அழைப்பதற்கு முன்னர்

அவர்களை பாடசாலை நூலகத்தில் அடைத்து வைத்துள்ளதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான சிறுவர்கள் மற்றும் ஏனைய தரம் 5 மாணவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் அமரசிங்க தெரிவித்தார். தாங்கள் நூலக அறையில் அதிபர் மற்றும் மற்றொரு ஆசிரியரால் தாக்கப்பட்டதாகவும், 

அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் மூன்று பேரை பொலிசார் வந்து தாக்கியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் பாடசாலைக்கு வெளியே ஜீப்பில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டு, ஜீப்பிற்குள் இருந்த வயர் 

அவர்களின் வெறும் காலுக்கு அடியில் வைக்கப்பட்டு மின்சாரத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பொலிஸ் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், 

விசாரணைகள் நிறைவடைந்தவுடன், மூன்று பொலிஸாரும் கைது செய்யப்பட்டு மிருகத்தனமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அமரசிங்க மேலும் கூறினார்.