வீதியை மறித்து மக்கள் போராட்டம், பொலிஸார் - பொதுமக்கள் இடையே முறுகல்! வானத்தை நோக்கி சுட்ட பொலிஸார், பொலிஸ் அதிகாரி காயம்..
யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து உருவான பதற்றமான சூழலை தடுக்க சென்றிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்துப் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை கெட்டிக்கொலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதியை மறித்து போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானதை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் உருவாகி பின்னர் அது மோதலாக மாறியுள்ளது.
இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.