SuperTopAds

வடமாகாணத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த உயர்மட்ட கலந்துரையாடல்! நீதி அமைச்சர், முப்படைகள், பொலிஸார் பங்கேற்பு..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த உயர்மட்ட கலந்துரையாடல்! நீதி அமைச்சர், முப்படைகள், பொலிஸார் பங்கேற்பு..

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பயன்பாடு தொடர்பில் நீதி அமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் தலைமையில் விசேட கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. 

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, 

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள போதை பொருள் பாவனை தொடர்பிலும் அதனை கட்டுப்படுத்த ஒருவிசேட அணியை உருவாக்கி போதை பாவனையை கட்டுப்படுத்த உத்தேசித்துள்ளோம். 

போதைப் பொருள் என்பது ஒரு சமூகம் மட்டும் பிரச்சினையாக மாறிவிட்டது எனவே அதனை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. குறிப்பாக வடமாகாணத்தில் உள்ள இளைஞர்கள் அதிகளவில் இந்த போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதனை கட்டுப்படுத்த விசேட அணி ஒன்றினை உருவாக்கி அந்த அணியின் மூலம் எவ்வாறு போதைப்பொருள் விநியோகிக்கப்படுகின்றது போதைப் பொருள் விநியோகத்தர்கள் யார்? அவர்களுக்கு எவ்வாறு போதை பொருள் கிடைக்கின்றது?

எங்கிருந்து போதைப்பொருள் கொண்டுவரப்படுகின்றது? போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதிகரித்துள்ள போதைப்பொருள் பிரச்சனை தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலைமையில் முப்படையினர் மற்றும் பொலிசார் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலர்கள் ஆகியோர் இணைந்து ஒரு அணி ஒன்றினை உருவாக்கி 

போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசே கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்து போதைப் பொருள் பாவனையை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராயவுள்ளோம் என்றார்.