ஹசரங்க - தீக்ஷன சுழல் மாயம் அவுஸ்திரேலியாவுக்கு பெரும் சவால்!! -கூறுகிறார் மிட்செல் மார்ஷ்-
இலங்கை அணியின் உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்களான வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் உள்ளமை தமது அணிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பேர்த் ஆடுகளம் தமது அணியில் உள்ள வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிக சாதகத்தைக் கொடுக்கும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரி-20 உலகக் கிண்ணத்தில் சுபர் 12 சுற்றில் இன்று செவ்வாய்க்கிழமை பேர்த்தில் நடைபெறவுள்ள குழு 1 க்கான 5 ஆவது போட்டியில் நடப்புச் சம்பியனான அவுஸ்திரேலிய அணியும் இலங்கை அணியும் தங்கள் 2 ஆவது போட்டியில் மோதவுள்ளன.
இந்த நிலையில், போட்டிக்கு முன்பாக திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர்,
நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தாலும் இலங்கைக்கு எதிரான போட்டியில் எங்களுடைய வழக்கமான திறமைக்கு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும், இலங்கை மிகவும் சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்தாலும் இந்த மைதானத்தின் ஆடுகளம் அவர்களைக் காட்டிலும் எமக்கு தான் சாதகமாக இருக்கும். அதேபோல, ஆடுகளம் தொடர்பில் நல்லதொரு புரிந்துணர்வும் எமக்கு உண்டு.
இதனிடையே, இலங்கை அணியில் வனிந்து மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இரண்டு உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இது எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். குறிப்பாக, வனிந்து ஹஸரங்க சிறந்த பந்துவீச்சாளர். அவரது வித்தியாசமான நுணுக்கங்கள் எமக்கு நெருக்கடியைக் கொடுக்கும்.
எனினும், வனிந்து மற்றும் மஹீஷின் பந்துவீச்சை எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவிப்பதே எமது குறிக்கோளாகும். ஆனாலும், அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் எமக்கு சுழல் பந்துவீச்சை எதிர்கொள்வது கடினமான விடயமல்ல.
இருப்பினும் பேர்த் ஆடுகளம் சுழல் பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் வேகப் பந்துவீச்சாளர்களுக்குத் தான் மிகப் பெரிய சாதகத்தைக் கொடுக்கும் என நான் நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.