SuperTopAds

நடுவரின் முறையற்ற பந்துவீச்சு அறிவிப்பு!! -பெரும் சர்ச்சையானது-

ஆசிரியர் - Editor II
நடுவரின் முறையற்ற பந்துவீச்சு அறிவிப்பு!! -பெரும் சர்ச்சையானது-

இந்தியா – பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிய போது 20 ஆவது பந்துப்பரிமாற்றத்தின் 4 ஆவது பந்தை நடுவர் முறையற்ற பந்து (நோ-பால்) என அறிவித்ததால் அது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இப் போட்டியில் 20 ஆவது பந்துப்பரிமாற்றத்தை ஸ்பின் பவுலர் முகமது நவாஸ் வீசினார். இதில் 4 ஆவது பந்தை புல் டாஸாக அவர் வீசியதால் அந்த பந்தை விராட் கோலி சிக்ஸ் அடித்தார். இடுப்புக்கு மேல் வீசப்பட்ட பந்து என்பதால் அதை முறையற்ற பந்து என நடுவர்கள் அறிவித்தனர். 

ஆனால் அதற்கு பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து நடுவர்களிடம் முறையிட்டனர். இருப்பினும் அந்த அறிவிப்பு சரியானதே என்று நடுவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து 4 ஆவது பந்துக்கு இலவச அடி (ப்ரீ ஹிட்) வழங்கப்பட்டது. 4 ஆவது பந்தை விராட் கோலி எதிர்கொண்ட போது அது ஸ்டம்பில் பட்டு போல்டானது. ஆனால் இலவச அடி என்பதால் அந்த பந்தில் விராட் கோலியும், தினேஷ் கார்த்திக்கும் ஓடியே 3 ஓட்டங்கள் எடுத்தனர். 

இதையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் நடுவர்களிடம் வந்து அந்த பந்தை டெட் பால் என அறிவிக்க வேண்டும் என்று முறையிட்டனர். ஆனால் அதற்கும் நடுவர்கள் செவி சாய்க்கவில்லை. ஐ.சி.சி விதிகளின் படியே முடிவு எடுக்கப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்தனர்.

யாருக்கு வெற்றி-தோல்வி என்ற நிலையில் பரபரப்பாக ஆட்டம் சென்று கொண்டிருந்த போது நடுவர்கள் வழங்கிய முறையற்ற பந்து என்ற அறிவிப்பு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நடுவர்கள் வழங்கிய முடிவு சரியே என்று சிலரும், தவறு என்று சிலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.