யாழ்.பருத்தித்தீவில் நடப்பது என்ன? தங்கியிருப்பது யார்? பொறுப்புவாய்ந்தோர் கைவிரிப்பு, அனுமதியும் கொடுக்கவில்லையாம்..
யாழ்.பருத்தித்தீவுக் கடற்பரப்பில் என்ன நடக்கிறது என மீனவ சங்கங்களுக்கே அறிய முடியாதுள்ள நிலையில் இந்தியா ஊடகத்தில் வெளிவந்த செய்தி தொடர்பில் மீனவ அமைப்பினருடன் கலந்து உரையாட உள்ளதாக யாழ்.மாவட்ட கடத்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.
நேற்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவரால் இந்தியா ஊடகத்தில் வெளிவந்த செய்தியில் யாழ்ப்பாணத்தில் மூன்று இடங்களில் சீன இராணுவத்தினர் நடமாடுவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊர்காவற்றுறை பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்தின் பிரகாரம் பருத்தித் தீவில் கடல் அட்டைப் பண்ணைக்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பருத்தித் தீவில் சட்ட விரோதமான முறையில் கடல் அட்ட பண்ணை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இது யாருடைய பண்ணை? பிரதேச செயலகம் அனுமதி வழங்கவில்லை என்கிறது! யார் அமைப்பதற்கு அனுமதி வழங்கினார்கள்?அங்கு நிற்பவர்கள் யார்? என்பது கூட எமக்குத் தெரியாது. வட மாகாணத்தில் அட்டப்பண்ணைகளை வழங்குவதற்கு நெக்டா நிறுவனம் பொறுப்பாக உள்ள நிலையில் அவர்களுக்கு தெரிந்தே பருத்தித்தீவில் அட்டைப் பண்ணை வழங்கப்பட்டது.
இந்தியா ஊடகத்தில் யாழ்ப்பாணத்தில் சீன இராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பதாகவும் பருத்தித்தீவில் அவதானிக்கப்பட்டதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். யாழ்.குடா கடல் இயற்கையாகவே இறால், கடலட்டை மற்றும் மீன் இனங்கள் இனப் பெருக்கம் இடம்பெறும் பகுதிகளாகக் காணப்படுகின்ற நிலையில் செயற்கையாக அட்டைப் பண்ணையை அமைப்பதன் நோக்கம் என்ன?
யாழ்.குடாவில் 50 வருடங்களுக்கு முன்பே கடலில் இயற்கையாக வளருகின்ற அட்டைகளை பிடித்து முதலாளிகள் ஆனவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் கடற் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் அட்டைகளை வளர்த்து ஏற்றுமதி செய்தார்கள்.
ஆனால் இன்று புதிதாக அட்டை வளர்ப்பை ஊக்குவிக்கிறோம் எனக் கூறிக்கொண்டு விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள் இன்றி நெக்டா நிறுவனம் கடலை மாசுபடுத்தி வருகிறது. இவ்வாறான நிலையில் இந்திய முதலீட்டாளர்களை அழைத்து அட்டை பண்ணைகள் வழங்கப் போவதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.
இந்தியாவில் கடல் மாசுபடும் என்பதற்காக இந்திய அரசே அட்டப்பண்ணையை நிறுத்தியுள்ள நிலையில் இங்கு மட்டும் முதலீடு செய்வதற்கு இந்தியர்களை அனுமதிக்க முடியாது. ஆகவே எமது கடல் எமக்குச் சொந்தம் இந்தியாவாக இருந்தாலும் சீனாவாக இருந்தாலும் கடல் அட்டை என்ற போர்வையில்
எமது வளமான பகுதிகளை அபகரிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.குறித்த ஊடக சந்திப்பில் வடமராட்சி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கமும் கலந்து கொண்டார்.