இலங்கையின் கனவு தகர்ந்தது!! -பெண்கள் ஆசியக் கோப்பையை கைப்பற்றியது இந்தியா-
வங்காளதேசில் பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.
நணய சுழல்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதிக ஓட்டங்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் வெளியேறினர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ஓட்டங்களை பெற்றது.
அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ஓட்டங்களை அடித்தார். இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இலங்கையை 65 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது இந்தியா இதையடுத்து 66 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 8.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.
ஸ்மிருதி மந்தனா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 ரன்கள் (ஆட்டமிளக்காமல்) குவித்தார். இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இதன்மூலம் ஏழாவது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது. இன்றைய போட்டியின் சிறந்த வீராங்கனையாக ரேணுகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது.