ஹெரோயின் போதைப்பொருளை காரில் கடத்தி சென்ற மூவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது
ஹெரோயின் போதைப்பொருளை காரில் கடத்தி சென்ற 3 சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (23) அதிகாலை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை -கல்முனை பிரதான வீதி மல்வத்தை பிள்ளையார் கோவில் அருகில் வைத்து சந்தேக நபர்கள் மூவரும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகினர்.
இவ்வாறு கைதான நபர்கள் அம்பாறை நகர் பகுதியைச் சேர்ந்த 33, 37 , 38 வயது மதிக்கத்தக்கவர்களாவர்.அத்துடன் சந்தேக நபர்கள் பயணம் செய்த கருப்பு நிற கொரோல்லா கார் அவர்கள் வசம் இருந்த ஹெரோயின் போதைப்பொருள் 06 கிராம் 840 மில்லிகிராம் தொகுதி பணம் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம் டயஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட்களான பண்டார (13443) வீரகோன்(33354) பொலிஸ் கன்டபிள்களான பெரேரா (71664) அபேரட்ன (75812) நிமேஸ்(90699) சாரதி ஜெயரட்ன (19786) அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட நபர்கள் சான்று பொருட்களுடன் சம்மாந்துறை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தில் தொடர்பு பட்ட சந்தேக நபர்கள் மூவரும் இப்பிராந்தியத்தில் போதைப்பொருள் பிரதான முகவர்களாக செயற்பட்டு வந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.