பட்டம் விடும் போட்டியில் உருவான தகராறே தந்தையும், இரு மகன்களும் சுட்டுக் கொல்லப்படக் காரணம்! இதுவரை 7 தொடர் கொலைகள் பதிவாம், பொலிஸார் அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
பட்டம் விடும் போட்டியில் உருவான தகராறே தந்தையும், இரு மகன்களும் சுட்டுக் கொல்லப்படக் காரணம்! இதுவரை 7 தொடர் கொலைகள் பதிவாம், பொலிஸார் அதிர்ச்சி தகவல்..

மினுவாங்கொட பகுதியில் நேற்ற காலை தந்தையும், இரு மகன்களும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் பட்டம் விடும் போட்டியில் நடந்த தகராறே கொலைக்கு காரணம் எனவும், பலகாலம் நீடிக்கும் இந்த பகையில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். 

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை மையபப்டுத்தி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் பிரகாரம், இந்த முக்கொலையானது 2017 ஆம் ஆண்டு முதல் தொடரும் இரு குடும்பங்களுக்கு இடையிலான பறக்கவிடும் பட்டம் ஒன்றினை மையப்படுத்திய பிரச்சினையின் எதிரொலி என சந்தேகிக்கப்படுகின்றது.

அதன்படி இந்த பட்டம் விடும் பிரச்சினை காரணமாக இதுவரை 7 மனிதக் கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று வியாழக்கிழமை ( 6) கொலை செய்யப்பட்ட தந்தை மற்றும் மகன்மார் இருவரும், இதே பட்டப் பிரச்சினையில் நடந்த கொலை சம்பவம் ஒன்றுக்காக விளக்கமறியலில் இருந்துவிட்டு அண்மையிலேயே பிணையில் விடுதலை பெற்றுள்ளனர். 

இவ்வாறான பின்னணியிலேயே அவர்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி இந்த தொடர் கொலைகளின் முதல் கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது. 2017 ஆகஸ்ட் 25 ஆம் திகதி ஏற்பட்ட பட்டம் பறக்கவிடுதல் தொடர்பிலான வாய்த்தர்க்கத்தின் எதிரொலியாக அந்த கொலைகள் இடம்பெற்றிருந்தன. 

இதன்போது தந்தை ஒருவரும் அவரது மகனும் கொலை செய்யப்பட்டிருந்தனர். இந் நிலையில் அந்த சம்பவத்துக்காக பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மற்றொரு தந்தையையும் மகனையும் கைது செய்திருந்தனர். அவர்களில் ஒருவர் பின்னர் கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் அக்கொலையின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் இளைஞர் ஒருவர் கடந்த வருடம் ஜூன் மாதம் கொலை செய்யப்பட்ட நிலையில், அக்கொலை தொடர்பில் நேற்று வியாழக்கிழமை ( 6) கொலை செய்யப்பட்ட தந்தை, மகன்மார் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இவ்வாறான நிலையிலேயே அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட குறித்த மூவரும் வீட்டிலிருந்தபோது, வீட்டுக்கு வந்துள்ள சந்தேக நபர்கள், பொலிஸார் வந்துள்ளதாக கூறி கதவை திறக்குமாறு கூறியுள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸாரின் சீருடையில் இருந்துள்ளார். 

கதவு திறக்கப்பட்டதும் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக இதுவரையான விசாரணைகளில் பொலிஸார் தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர். காலை 7.00 மணியளவில் பதிவான சம்பவத்தில் மகன்மார் இருவரும் ஸ்தலத்திலேயயே உயிரிழந்ததாகவும் 

தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர். துப்பாக்கிச் சூடு நடாத்தும் போது வீட்டில் ஏனையோரும் இருந்துள்ளனர். அவர்களுக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. பின்னர் பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கைகளில்,

சந்தேக நபர்கள் வருகை தந்ததாக கூறப்படும் கார், கம்பஹா - படல்கம பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந் நிலையிலேயே சம்பவத்தின் மூன்று சந்தேக நபர்களை அதிரடிப் படையினர் பஸ் ஒன்றில் அனுராதபுரம் பகுதியை நோக்கி பயணிக்கும் போது கலேவலையில் வைத்து கைது செய்துள்ளனர். 

மேலதிக விசாரணைகளை கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் நேரடி கட்டுப்படடில் மினுவாங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு