தமிழ் ஊடகவியலாளர்களை முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்குள்ளது: கஜேந்திரன் காட்டம்

ஆசிரியர் - Admin
தமிழ் ஊடகவியலாளர்களை முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்குள்ளது: கஜேந்திரன் காட்டம்

தமிழ் ஊடகவியலாளர்கள் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் உறுதியாகவிருக்கின்ற காரணத்தால் அவர்களின் செயற்பாடுகளை எப்படியாவது முடக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்குள்ளது. இப்படிப்பட்ட அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு நல்ல பிள்ளைகளாகக் காட்டிக் கொள்வதற்குத் தமிழ் அரசியல் தலைமைகள் முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

எனவே, தமிழ் அரசியல் தலைமைகள் ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்களாகவுள்ளனர் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றின் ஊடகவியலாளர் கடந்த திங்கட்கிழமை அதிகாலை யாழ்.கொழும்புத்துறைப் பகுதியில் வைத்துக் கடுமையாகத் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும், சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் இன்று புதன்கிழமை(30) முற்பகல் யாழ்.நகரில் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை ஏற்பாடு செய்து நடாத்தினர்.

குறித்த போராட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விவாகரத்தில் அவருக்கு முண்டு கொடுத்தவர்கள் அவருக்கு அழுத்தம் வழங்கி யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகின்றார்களா? அல்லது தொடர்ந்தும் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீதும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் நடாத்தப்படும் அடக்கு முறைகளுக்கெதிராக வெறுமனே இவ்வாறான போராட்டங்களில் மாத்திரம் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் நல்லவர்கள் போன்று நாடகமாடி ஊடகவியலாளர்களுக்கெதிரான அடக்கு முறைகளுக்கு அரசாங்கத்துடன் துணை நிற்கப் போகின்றார்களா?

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணை நடாத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

இல்லாவிடில் ஊடக அடக்கு முறைகளுக்கெதிராகப் பரந்தளவில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைமைக்கு ஊடக நிறுவனங்களும், பொது அமைப்புக்களும் தள்ளப்படுவார்கள். அவர்களுடன் இணைந்து நாமும் போராட வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு