முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு பிரயோகம்! பொலிஸார், ஒருவர் காயம், போராட்டம் தொடர்கிறது..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு பிரயோகம்! பொலிஸார், ஒருவர் காயம், போராட்டம் தொடர்கிறது..

முல்லைத்தீவு நகரில போராட்டம் நடத்திய மீனவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். 

சுருக்கு வலை மீன்பிடியை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு கோரியே மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். 

முல்லைத்தீவு பிரதான பஸ் தரப்பிடத்திற்கு அருகிலிருந்து கடற்றொழில் திணைக்களத்தை நோக்கி பேரணியாக சென்ற போது, 

கடற்கரை வீதியில் பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் வீதித் தடைகளையும் மீறிச் செல்ல முயற்சித்த போது, பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மயக்கமுற்ற மீனவர் ஒருவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கண்ணீர்ப்புகை பிரயோகத்தின் பின்னர், எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்ட மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

சுருக்கு வலை மீன்பிடியை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்குமாறும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் 

தமக்கான எரிபொருளை வழங்குமாறும் வலியுறுத்தி மீனவர்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர். 

இதேவேளை, தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறையை முற்றாக நிறுத்துமாறும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்குமாறும் வலியுறுத்தி, 

மற்றுமொரு மீனவர் தரப்பினால் கடற்றொழில் திணைக்கத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு நடவடிக்கை மூன்றாவது நாளாகவும் இன்றும்(05) தொடர்கிறது.

பொலிஸாரும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளும் கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் இன்று(05) முற்பகல் கலந்துரையாடியுள்ளனர். 

மீனவர்களின் கோரிக்கையை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், தொடர்ச்சியாக மீனவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் குமணன்

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு