டுபாயில் கட்டப்பட்ட இந்து கோவில்!! -இன்று திறக்கப்படுகிறது-
டுபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இந்து கோவிலின் திறப்பு விழா இன்று புதன்கிழமை மாலை நடைபெறுகிறது.
இன்று புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு கோவிலை திறந்து வைக்க உள்ளனர். இந்த கோயிலானது, ஏற்கெனவே அமைந்துள்ள சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கம் ஆகும்.
சிந்தி குரு தர்பார் கோவிலானது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகும். டுபாயின் புதிய கோவிலின் அடித்தளம் பெப்ரவரி 2020இல் நாட்டப்பட்டது. கிட்டத்தட்ட இரு வருடங்களுக்குப் பின் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இன்று புதன்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்காக இந்த கோயில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும். இந்த கோவில் அனைத்து மதத்தினரையும் வரவேற்கிறது மற்றும் வழிபாட்டாளர்கள் மற்றும் பிற பார்வையாளர்களுக்கு நுழைவதற்கும் அனுமதி அளித்துள்ளது கோவில் நிர்வாகம்.
தினசரி அடிப்படையில் சுமார் 1000 முதல் 1200 பக்தர்கள் வழிபாடு செய்யலாம். டுபாயின் புதிய இந்து கோவில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கூட்ட நெரிசலை தவிர்க்க பார்வையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் கியூஆர் குறியீடு அடிப்படையிலான முன்பதிவு முறையை செயல்படுத்தியுள்ளது.
ஜெபல் அலி பகுதியில் பல தேவாலயங்கள் மற்றும் சீக்கிய குருத்வாரா உள்ள நிலையில், டுபாயின் புதிய இந்து கோவில் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் டுபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.