அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்களை அடக்குவது மட்டுமே பொலிஸாரின் வேலையாக இருக்ககூடாது! குருந்துார் விவகாரத்தில் அங்கஜன் காட்டம்..

ஆசிரியர் - Editor I
அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்களை அடக்குவது மட்டுமே பொலிஸாரின் வேலையாக இருக்ககூடாது! குருந்துார் விவகாரத்தில் அங்கஜன் காட்டம்..

நீதிமன்ற கட்டளையை மீறி குருந்துார் மலையில் நடக்கும் விடயங்கள் நாட்டின் ஜனநாயக தன்மையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார். 

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளைகளை புறந்தள்ளி குருந்தூர்மலைப் பகுதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாட்டினை கடுமையாக கண்டித்து அவர் அனுப்பிய ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு திணைக்களத்தின் செயற்பாடு இரண்டு மதங்களுக்கு இடையே குரோதங்களை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடு இனங்களுக்கிடையே,மதங்களுக்கிடையே குரோதங்களை ஏற்படுத்துவதாக காணப்படுகிறது. 

மதித்து நடக்க வேண்டிய நீதிமன்றக் கட்டளைகளை புறந்தள்ளுவதென்பது நாட்டின் ஜனநாயகத்தை மீறும் செயற்பாடு. நீதிமன்றக் கட்டளைகளை பேணுபவர்களாக பொலிஸார் இருக்க வேண்டுமே தவிர தவறுகளை கண்டு கிளர்ந்தெழும் மக்களை அச்சுறுத்துவதாக பொலிஸாரின் செயற்பாடு அமையக் கூடாது. 

குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளை பேணப்பட வேண்டும்.பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு பூர்வீக மக்களின் காணிகள்,அவர்களின் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 

அதேபோன்று தமிழர்களின் பூர்வீக நிலமாகவும், உலக இந்துக்களின் புனித பூமியாகவும் திகழும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமான திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயச்சூழலில் ஏற்படுத்தப்படும் ஆக்கிரமிப்புகளும் எமது மக்களை பெரிதும் பாதித்துள்ளது. 

தொல்லியல் திணைக்களம் இனங்களுக்கிடையே குரோதங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு கோருவதோடு இதுவே ஜனநாயக பண்புகளை கொண்ட நாட்டு ஆட்சியாளர்களுக்கு நன்மை பயக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு