ஆசிய கிண்ணம் வென்ற வலைப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு தலா 20 இலட்சம்!! -வழங்கியது இலங்கை கிரிக்கெட்-
ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு தலா 20 இலட்சம் ரூபா வீதமும் இலங்கை கிரிக்கெட் சபை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதுமட்டுமல்லாமல் புற்றுநோய் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்டத்தில் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணியினருக்கும் வலைப்பந்தாட்ட மகளிர் அணியினருக்கும் மற்றும் கொமன் வெல்த் போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் பாராட்டு நிகழ்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில், அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஜந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக ஜனாதிபதியிடம் கையளித்தது.
அத்துடன் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய மகளிர் வலைப்பந்தாட்ட வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் தலா 20 இலட்சம் ரூபாவையும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கையளித்தது.
இதேவேளை, கொமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு 10 மில்லியன் ரூபாவையும், வெண்கலப் பதக்கம் வென்றவர் 5 மில்லியன் ரூபாவையும் மற்றும் பயிற்சியாளர்கள் 25 சதவீதமும் விளையாட்டு நிதியிலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.