ஆசியக் கிண்ணத்துடன் நாட்டை வந்தடைந்த வலைப்பந்தாட்ட அணி!! -விமான நிலையத்தில் இருந்து அமோக வரவேற்பு-
2022 ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை மகளிர் அணி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நாட்டை வந்தடைந்த நிலையில், விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இலங்கை அணி நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இடம்பெற்ற இவ்வாண்டுக்கான ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் சிங்கப்பூரை வீழ்த்தி 06 ஆவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரின் கிண்ணத்தை தனதாக்கியது.
இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியன் சிங்கப்பூரிடம் ஆரம்பத்தில் கடும் சவாலை எதிர்கொண்ட நடப்பு சம்பியன் இலங்கை 63 - 52 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.
குறிப்பாக 43 வயதான யாழ்.மாவட்டத்தை சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் தனது வயதையும் மீறி கோல் போடுவதில் அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தி இறுதி ஆட்டம் உட்பட இலங்கையின் சகல வெற்றிகளிலும் பெரும் பங்காற்றியிருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இலங்கை அணி, ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாக தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் இம்முறை கிண்ணத்தை வென்றமை விசேட அம்சமாகும்.
ஆசியாவில் பலம் வாய்ந்த வலைப்பந்தாட்ட அணியாக ஆறாவது தடவையாகவும் திறமையை நிரூபித்த இலங்கை வீராங்கனைகள், அடுத்த வருடம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற இலங்கை அணியை வரவேற்கும் நிகழ்வில் விளையாட்டு அமைச்சின் உறுப்பினர்கள், விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.