சி.எஸ்.கே உத்வேகம் கிண்ணத்தை வெல்ல உதவியது!! -இலங்கை அணித்தலைவர் தசுன் ஷனகா-

ஆசிரியர் - Editor II
சி.எஸ்.கே உத்வேகம் கிண்ணத்தை வெல்ல உதவியது!! -இலங்கை அணித்தலைவர் தசுன் ஷனகா-

துபாயில் நடந்த 15 ஆவது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை சாம்பியன் கிண்ணத்தை வென்றது. 

நாணயசுழல்ச்சியில் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

பனுகா ராஜபக்சே 45 பந்தில் 71 ஓட்டங்களும், (6 பவுண்டரி, 3 சிக்சர்), ஹசரங்கா 21 பந்தில் 36 ஓட்டங்களும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஹாரிஸ் ரவூப் 3 விக்கெட்டும், நசீம்ஷா, ஷதாப்கான், இப்தி கார் அகமது தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் இலங்கை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.

இறுதிப்போட்டிக்கு முன்பு இந்த தொடரில் நடந்த 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறை மட்டுமே வெற்றி பெற்றது. 2 ஆவது ஆடிய அணி 9 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 

இதனால் இறுதிப் போட்டியில் 2ஆ வது ஆடிய பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலில் ஆடிய இலங்கை சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்தது.

இதுகுறித்து இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனகா கூறியதாவது:-

2021 ஆம் ஆண்டு இதே துபாய் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் சி.எஸ்.கே அணி கொல்கத்தா நைட்ரைடர்சை வீழ்த்தி கோப்பையை வென்றது. சி.எஸ்.கே. முதலில் ஆடி இந்த வெற்றியை பெற்றது. இது எனது மனதில் இருந்தது. இதுபற்றி நாங்கள் பேசிக் கொண்டோம். சி.எஸ்.கே. அணியின் உத்வேகம் இலங்கை அணிக்கு உதவியாக இருந்தது.

ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் அவர்களுக்கு நான் கண்டிப்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சொந்த நாட்டில் விளையாடியது போல் ரசிகர்களின் ஆதரவு இருந்தது என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு